PTR ஆடியோ எபெக்ட்டா?…திமுக அரசு மீது பாயும் கம்யூனிஸ்டுகள்!
Author: Babu Lakshmanan27 April 2023, 10:24 pm
DMK Files, PTR ஆடியோ கிளிப்புகள்,அதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு என்று தமிழக அரசியல் களம் ஒரு பக்கம் பரபரத்துக் கொண்டிருக்க இன்னொரு புறம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து திமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது என்றே கூறவேண்டும்.
ஏற்கனவே சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திருமணம் ஆகாத பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணியை சேர்ந்த இருவரின் பாலியல் சீண்டல், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்குள் அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் புகுந்து சூறையாடல், அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தாராள போதை பொருள் நடமாட்டம் என மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பது பற்றி அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே சிலரால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. “அரசு அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் திமுக அரசை கடுமையாக சாடினர்.
அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் இந்தக் கொடூர கொலை குறித்து இதுவரை பொது வெளியில் வாய் திறந்ததாக தெரியவில்லை.
“இந்த சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. தனது கடமையை முறையாக நிறைவேற்றி அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது. உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கொலை சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களிலேயே அறிவிப்பை வெளியிட்டார். இதனால்தான் என்னவோ காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகள் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை போல் தெரிகிறது.
அதேநேரம், முதலமைச்சரின் நிதியில் ஒரு கோடி ரூபாய் நிதியும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட்டிய நிலையில்
திமுக அரசை கண்டிக்கும் விதமாக எச்சரிக்கை மணியும் அடித்துள்ளன.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் “மணல் கொள்ளை குறித்து பலரும் காவல்துறையிடமும், வேறு வகைகளிலும் முறையிட்டுள்ளனர். காவல்துறை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவேண்டும் என்று கேட்க கொலையாளிகளுக்கு பயந்து யாரும் எழுதி தர மறுத்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ்
துணிச்சலாக புகார் அளித்திருக்கிறார்.
அதனால் அந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு உரிய பாதுகாப்புகளை உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, முறப்பநாடு காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது காவல் துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது.
யாரும் முன்வராத சமயத்தில் இந்த வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்பது காவல் துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இப்பிரச்சனையில் காவல் துறையினர் உரிய முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளாமல் இருந்தது குறித்தும், லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகார் கொலையாளிகளுக்கு எப்படி தெரிய வந்தது குறித்தும் உரிய முறையில் விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தவிர மாநிலம் முழுவதும் கனிம வளங்களை திருடுவோர் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்த கொள்ளைக்கு எதிராக போராடுபவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு கனிம வளக் கொள்ளையர்கள் மீது உறவு வைத்துள்ள காவல்துறையினர் மற்றும் பிற துறை சார்ந்தோர் கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்று கொந்தளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த படுகொலை சம்பவம் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டுக் கும்பல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவர்களது சட்டவிரோத, சமூக விரோதச் செயல்களுக்கு உடன்படாத, ஒத்துப்போகாத அரசுப் பணியாளர்களை தாக்குவது, படுகொலை செய்வது அரசு கட்டமைப்பை நிலைகுலைக்கும் கடுமையான குற்றச்செயலாகும்.
அரசின் சட்ட விதிகளை பின்பற்றி, பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பணியாளர்களின் மன உறுதியை கடுமையாக பாதிக்கும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மணல், மண் போன்ற இயற்கை வளக் கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமல்ல வேறு பல பிரிவுகளிலும் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் வெளிப்பட்டு வருகின்றன என்பதை அரசு கவனிக்கவேண்டும்.
காவல் துறை குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி மேலும் தீவிரமாக வேண்டும். எந்த நிர்பந்தங்களுக்கும், அழுத்தங்களுக்கும் பணிந்து விடாமல் தடுக்கும் உறுதியான நடவடிக்கை எடுத்து, குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்”என்று காட்டமாக கூறி இருக்கிறார்.
“இரு கம்யூனிஸ்ட் தலைவர்களின் கண்டனத்தையும் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் நன்கு புலப்படும். அதில் வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் காவல்துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற குற்றச்சாட்டை எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. அதேபோல் மணல், மண் போன்ற இயற்கை வளக் கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமல்ல வேறு பல பிரிவுகளிலும் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் வெளிப்பட்டு வருகின்றன என்பதும் திமுக அரசுக்கு நேரடியாக சுட்டிக்காட்டப்படுகிறது.
கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் இடம் மாறுதல் கோரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்துவரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த படுகொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதமும் சமூக நல ஆர்வலர்களால் வைக்கப்படுகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“அதேநேரம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமை தங்களுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியைத்தான் ஒதுக்கும் என்ற பேச்சு அறிவாலயத்தில் எழுந்திருப்பதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவ்வளவாக ரசிக்கவில்லை. கடந்த 2019 தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கிய நான்கு தொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதற்காக கூட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்படியொரு கண்டன நாடகத்தை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுவதையும் மறுக்க முடியாது.
மேலும் திமுக அமைச்சர்கள், எம்பிக்களுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல், முதலமைச்சர் ஸ்டாலின் மீதான 200 கோடி ரூபாய் லஞ்சக் குற்றச்சாட்டு, போன்றவை தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால் திமுக கூட்டணியில் நீடித்தவாறு 2024 நாடாளுமன்றத் தேர்தலை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சந்திக்குமா? என்பதும் சந்தேகம்தான்.
தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ கிளிப் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சிபிஐயிடம் கோரிக்கை மனு வேறு
கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் தீவிரத்தை தமிழக காங்கிரஸ், விசிக, மதிமுகவை விட மார்க்சிஸ்ட்டும் இந்திய கம்யூனிஸ்டும் நன்றாகவே உணர்ந்துள்ளன. அது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்றும் அஞ்சுகின்றன. அதை எப்படி திமுக தலைமைக்கு உணர்த்துவது என்பது தெரியாமல்தான் தற்போது விஏஓ படுகொலையில் தங்களின் கோபத்தை திமுக அரசு மீது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காட்டி இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. இது தமிழக காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே தெரிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்!