புதுச்சேரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியாச்சு.. வேட்பாளர் யாருனு அவங்க தான் முடிவு செய்யணும் : முதலமைச்சர் ரங்கசாமி!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 3:14 pm
புதுச்சேரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியாச்சு.. வேட்பாளர் யாருனு அவங்க தான் முடிவு செய்யணும் : முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கி ஒரு மக்களவை தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் பாஜக போட்டியிட திட்டமிட்டது. கடந்த ஓராண்டாகவே புதுவை மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
அதேபோல், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் புதுவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகள் தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், அங்கு தேர்தல் பணியை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. புதுவை பாஜக தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம், தேர்தல் பிரசார அலுவலகம் கூட திறக்கப்பட்டது.
ஊரக பகுதிகளில் பிரசாரம், சுவர்களில் சின்னம் வரைவது என பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், புதுவை லோக்சபா தொகுதியில் பாஜக போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியானது. ஏற்கனவே, புதுவை முதல்வர் ரங்கசாமியும் பாஜகவே புதுவையில் போட்டியிடும் என்று சொல்லி வருகிறார். இந்த நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரங்கசாமியிடம், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருப்பதாகவும், புதுவையில் எப்போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரங்கசாமி, “புதுவை ஏற்கனவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அவர்கள்தான் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்றார்.
0
0