தச்சங்குறிச்சியில் இன்று நடக்கவிருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை ; காளையர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல்… போலீசார் குவிப்பு !!

Author: Babu Lakshmanan
6 January 2023, 8:56 am

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தடைவித்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையொட்டி, போலீசார் குவிந்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்நிலையில் ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.

ஆனால், இந்தாண்டு புத்தாண்டு தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி தர மறுத்துவிட்டது. இதனால், தச்சங்குறிச்சி ஊர் பொதுமக்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில், நேற்றுதான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசாணை வழங்கப்பட்டது.

இதையடுத்து, அரசாணை பெற்றுக் கொண்ட ஊர் பொதுமக்கள், தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில், நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.

அப்போது, அரசின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும், ஜல்லிக்கட்டு போட்டி தெருவில் நடப்பதாகவும் உட்பட பல்வேறு காரணங்களை காட்டி, நேற்று இரவு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்கள் நேற்று இரவு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தியதால், தச்சங்குறிச்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று தச்சன்குறிச்சி கிராமத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிற்கு திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தச்சங்குறிச்சி பகுதிக்கு வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை கூட வர முடியாத அளவிற்கு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இன்று தச்சங்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததால் தச்சங்குறிச்சி கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் குவிந்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 602

    0

    0