பொய் வழக்கு போட்டு திமுக பிரமுகர் மிரட்டல்… தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை…!!
Author: Babu Lakshmanan1 October 2022, 2:13 pm
புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்மணி பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியிடம் ஜாமீனில் விடுதலை பெற்று வந்த கோகிலா தினமும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த அடிப்படையில் கீரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வந்த நிலையில், மீண்டும் அவரை கொலை வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறையில் அடைப்பேன் என்று திமுகவைச் சேர்ந்த பாலு என்பவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது மனைவி புவனேஸ்வரி கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதால், மற்ற அதிகாரிகளும் புவனேஸ்வரிக்கு சாதகமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கோகிலா மீது புகார் கொடுத்திருப்பதாக போலீசார் கூறிய தகவல் கோகிலாவின் மனதை பெரிதும் பாதித்தது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட குடும்பத்தினர் தனது குடும்பத்தினரையும், தன்னையும் மிரட்டி வருவதாகவும், இதனால் தனது நிம்மதி இழந்து விட்டதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, கோகிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் கோகிலாவின் உறவினர்கள் மற்றும் ஊர் ஊர்காரர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, அறந்தாங்கி வட்டாட்சியர் ஆலங்குடி டிஎஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில் அந்த பாதையை சீர் செய்தனர்.
பொதுமக்களுக்கு பிரச்சனை என்ற போது பாதையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும், தனக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், உடனடியாக பாதையை சீரமைப்பதை கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சடைந்துள்ளனர்.