பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு ; இரு தமிழக ராணுவ வீரர்கள் பலி.. சொந்த ஊர் கொண்டுவரப்படும் உடல்கள்!!
Author: Babu Lakshmanan13 ஏப்ரல் 2023, 11:09 காலை
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு தமிழக ராணுவ வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் யாரும் உள்ளே இல்லை. துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. சாப்பாட்டு கூடத்துக்கு பின்னால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தேனியை சேர்ந்த யோகேஷ் குமார் (24), சேலத்தை சேர்ந்த கமலேஷ் (24) என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி நெசவு தொழிலாளி ஆவார். ராணுவ வீரரின் தாயார் செல்வமணி. இவர்களின் 2வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு் திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட இருக்கிறது.
0
0