டாஸ்மாக் நிலைமை தான் குவாரிகளுக்கும்… தமிழக அரசின் கஜானா உயரனுமா..? அப்ப இதை செய்யுங்க ; இபிஎஸ் கொடுத்த ஐடியா..!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 12:44 pm

முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம். சாண்ட் குவாரி தொழில்களுக்கு திமுக அரசு மூடுவிழா காணத் துடிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி,

தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால், தமிழகமெங்கும் எம். சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, தமிழ் நாடு முழுவதும் குவாரி தொழிலை நம்பியுள்ள லாரி தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும்; வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையை சரிசெய்ய, பல்வேறு கனிமவள விதிகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும். அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசைத் தொழில்களுக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியத் தலைவர்களே வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த விடியா ஆட்சியில், குவாரி லைசென்ஸ் புதுப்பிக்க காலதாமதம் ஆகின்றன. எனவே, காலதாமதமின்றி விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்,

சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கல் குவாரி உரிமையாளர்கள் விடியா திமுக அரசிடம் முன்வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக, விடியா திமுக அரசின் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, தொழிலை முடக்கும் விதமாக நியாயமின்றி அபராதம் விதிக்கும் போக்கு தொடங்கி உள்ளதாகவும்; அதனை எதிர்த்தே தற்போது தாங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம் என்று குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், GST வரி விதிப்பிற்குப் பிறகு தமிழ் நாட்டில் உள்ள வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான வரியினை அரசுக்குச் செலுத்தி பயமின்றி வணிகம் செய்து வருகின்றனர்.

அதேபோல், மாநில அரசும், கல் குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நிம்மதியாக, நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும்.

தற்போது, டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியினை இந்த விடியா திமுக அரசு வழங்காததால், சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்டு, அதன் வருமானம் தனிப்பட்ட ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றதுபோல், குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும். கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும். எனவே கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu