கேள்விக்குறியாகும் கருத்து சுதந்திரம்?…தமிழகத்தில் வெடித்த சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 6:57 pm

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சொத்து வரி, மின் கட்டணம் கடும் அதிகரிப்பு, விலைவாசி கிடுகிடு உயர்வு, கள்ளச்சாராய பலி 25, கள்ளக்குறிச்சி பள்ளிக்கலவரம், 20க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பத்திரிகை சுதந்திரம் உள்ளதா?… இல்லையா?

இவற்றுக்கு இணையாக தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் உள்ளதா?… இல்லையா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இதற்கு காரணம் திமுக அரசுக்கு எதிராக உரக்க குரல் கொடுபோர், விமர்சனம் செய்வோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதுதான்.

அதுவும் யூ டியூபர்கள் என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சில நேரங்களில் இரவோடு இரவாக அவர்களின் வீடுகளுக்கு சென்று கடும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பது போல சுற்றி வளைத்து கைது செய்யப்படும் நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. சவுக்கு சங்கர், மாரிதாஸ், கிஷோர் கே ஸ்வாமி, சாட்டை துரைமுருகன் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பத்ரி ஷோத்ரி கைது

இந்த நிலையில்தான சென்னையில் உள்ள கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளரும் பிரபல எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி திடீரென தமிழக போலீசாரால் அதிகாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார். பத்ரி சேஷாத்ரி, தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர். வலது சாரி சிந்தனையாளரான அவர் மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு யூ டியூப் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டிதான் அவரை சிறைக்கு செல்லும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

அதேநேரம் அவர் கைது செய்யப்பட்டது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் பற்றிய விவாதத்துக்குரிய விஷயமாகவும் மாறிவிட்டது.

பத்ரி சேஷாத்ரி கூறுகையில், “மணிப்பூர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பெரிய அது? என்ன வார்த்தையை கூறுவது என்று தெரியவில்லை. உங்களால் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்வோம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூர் செல்லுங்கள் சார். அங்கு ஏதாவது அமைதியை கொண்டுவர முடியுமா என்று நீங்கள் பாருங்கள். சும்மா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் ஏதாவது பேசவேண்டியது. நீதிமன்றமாக நீங்கள் அரசாங்கத்திற்குள் நுழையமுடியுமா?மத்திய அரசும், மணிப்பூர் அரசும் செய்து கொண்டிருப்பதில் என்ன குறை கண்டீர்கள்?…

கைதுக்கான் காரணம்

2 பேர் அடித்துக்கொள்கிறார்கள்.  அது ஒரு மலைப்பாங்கான பகுதி. மிகவும் சிக்கலான நிலப்பரப்பு. அதற்குள் கொலை நடக்கத்தான் நடக்கும். அவர்கள் ஏன் அடித்துக்கொண்டார்கள்? என்ற காரணத்தை நீங்கள் முன்கூட்டியே கண்டு தடுத்திருக்க முடியுமா? அதெல்லாம் அவ்வளவு சுலபமாக முடியாது. அதற்காக அங்கு நடத்தப்பட்ட வன்முறையில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கவே இல்லை என்று நான் கூறவில்லை.

ஆனால் அங்கு ராணுவம் தலையிட்டு எதாவது பிரச்னையானால் உடனே தமிழ்நாட்டில் உள்ள கவிஞர்கள், குறிப்பாக பெண் கவிஞர்கள் கவிதை எழுத துவங்கி விடுகிறார்கள். அதேபோல ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் உடனே குறை கூறுகின்றார்கள். மேலும் தமிழர்களைப் போல அங்கு நடக்கும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் பொறுக்கித்தனம் செய்யும் பிறரை நம்மால் பார்க்க முடியாது”என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழக காவல்துறை காட்டிய அவசரம்

இது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு, பத்ரி சேஷாத்ரியின் பேட்டி நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைப்பதாகவும், இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் அமைந்து இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி குன்னம் போலீசில் அளித்த புகாரின் பேரில் அவரை காவல் துறை சென்னையில் கைது செய்தது.

நீதிபதி தொடர்பாக பத்ரி சேஷாத்ரி கூறிய கருத்துக்கள் கடுமையானவை என்றால் அவர் மீது சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்யும் வாய்ப்பு உள்ள நிலையில் தமிழக காவல்துறை அவரை ஏன் அவசர அவசரமாக கைது செய்தது? என்ற கேள்வியும் பொது வெளியில் எழுந்துள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தக் கைதை வன்மையாக கண்டித்துள்ளார். பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது, இந்த ஊழல் திமுக அரசு. இந்த அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும்தான் தமிழக காவல்துறையின் பணியா?”என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ “திமுக அரசின் தவறுகளை, அடக்குமுறைகள் குறித்து யாரும் பேசிவிட, எழுதிவிடக் கூடாது என்பதற்காக, திமுக அரசை எதிர்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுபவர்களை எல்லாம் திமுக அரசு கைது செய்து வருகிறது.

ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, தனி மனித உரிமை பற்றியெல்லாம் திமுகவினர் மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து விட்டால், ‘இம்’ என்றால் சிறைவாசம். ‘ஏன்?’ என்றால் வனவாசம்தான்.

பேசுவதற்கு, எழுதுவதற்கு, சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடுவதற்கெல்லாம் கைது செய்யப்பட வேண்டுமெனில், திமுகவினரில் பெரும்பாலானோர் நிரந்தரமாக சிறையில்தான் இருக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

ஆர்கே ராதாகிருஷ்ணன் சுளீர்

பிரபல பத்திரிகையாளரும், சமூக நல ஆர்வலருமான ஆர் கே ராதாகிருஷ்ணன் பதிவிட்ட ட்விட்டில், “எனது நண்பர் பத்ரி சேஷாத்ரியின் கைது கேலிக்குரியது மற்றும் முட்டாள்தனமானது. தலைமை நீதிபதியை பற்றி அவர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தார். நீதியரசர் சுவாமிநாதன் வழக்கைப் போலவே, நீதிமன்றமே அதை எடுத்துக் கொள்ளட்டும். திமுகவுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” வலியுறுத்தி இருக்கிறார்.

அவர் இப்படி பதிவிட்டதை பார்த்து கோபம் அடைந்த சிலர் தமிழர்களுக்கு எதிராக பேசுபவரை நீங்கள் ஆதரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப்
ஆர் கே ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் பேசியதை ட்விட் செய்யவா?” என்ற எதிர்கேள்வியை வைத்துள்ளார்.

அரசியல் சட்ட வல்லுநர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?…

ஆர்எஸ் பாரதி சர்ச்சை

“நீதிமன்றங்களை விமர்சிக்கும் போக்கு தமிழகத்திற்கு புதிய விஷயம் அல்ல. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ஒரு கூட்டத்தில்பேசும் போது, “ஓப்பனா சொல்றேன். ஒரு பட்டியல் இன வகுப்பினர் கூட மத்தியப் பிரதேசத்தில ஹைகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது அப்போதைய அதிமுக அரசு வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்கும் தொடர்ந்தது. கடைசியில் சுப்ரீம் கோர்ட்டில் ஆர் எஸ் பாரதி மேல் முறையீடு செய்தபோது, 2021 ஜூலை மாதம் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சவுக்கு சங்கர் கைது

அதைத்தொடர்ந்து கடந்தாண்டு தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நீதித்துறை குறித்து கடுமையாக விமர்சித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தார். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கை சவுக்கு சங்கர் மீது பதியும்படி உத்தரவிட்ட நிகழ்வும் நடந்தது.

மிக அண்மையில் அமைச்சர் எ வ வேலு ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளை திமுக தலைவர் கருணாநிதி போட்ட பிச்சை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது கோர்ட்டை அவமதிக்கும் செயலாக கருதப்படும் என்று யாரும் அவரிடம் கூறினார்களோ, என்னவோ பின்னர் செய்தியாளர்கள் முன்பாக அதற்காக மன்னிப்பும் கேட்டார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்டத்திற்கு கிடைத்த கொடை என்று கூற வந்தபோதுதான் வார்த்தைகள் தவறாக வந்துவிட்டது என்று விளக்கம் அளித்து அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

பத்ரி விவகாரத்தை பொறுத்தவரை நீதிமன்றத்தின் மாண்பை சீர் குலைக்கும் வகையில் பேசியிருக்கிறார் என்றால் அதற்காக சுப்ரீம் கோர்ட் தான் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

பாஜக ஆதரவாளர் என்பதால் கைதா?

அதேபோல் இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பத்ரி பேசியிருக்கிறார் என்று கூறுவதும் பொருத்தமற்ற வாதமாக உள்ளது. ஏனென்றால் மணிப்பூரில் கலவரம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. பத்ரி பேட்டி அளித்ததோ ஒரு வாரத்திற்கு முன்புதான்.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் பெரும்பாலான நேரங்களில் பத்ரி பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவர். தமிழக பத்திரிகை வட்டாரத்தில் மிகவும் அறியப்பட்டவர். அவரை கைது செய்திருப்பதன் மூலம் இதை பாஜகவினருக்கு விடுக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தலாகவே கருதத் தோன்றுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு எதிர்க்கட்சி நிர்வாகிகள், யூ டியூபர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 95 சதவீதம் பேர் எதிர்முகாமை சேர்ந்தவர்கள். அதேநேரம் திமுகவினர் தனிப்பட்ட முறையில் யாரையாவது மிகக் கடுமையாக விமர்சித்து அது தொடர்பான புகார்கள் வந்தால் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மிகக் குறைவு. கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் என்றால் மட்டுமே அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பல நேரங்களில் எப்ஐஆர் மட்டும் பதிவு செய்துவிட்டு அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதும் நடக்கிறது.

நடவடிக்கை எடுக்காத திமுக அரசு

திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கடுமையாகவும் தனிப்பட்ட முறையிலும் தாக்கும் போதெல்லாம் அதை யாராவது விமர்சித்தால் அது ஜனநாயகம் தங்களுக்குள்ள கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்று உரக்கப் பேசுவார்கள். ஆனால் யாராவது எதிர்வாதம் செய்தால் அவர்களை குறி வைத்து கைதும் செய்து விடுகிறார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊடக சுதந்திரம், எழுத்துரிமை பேச்சுரிமை என்று போராட்டத்தில் குதித்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமையோ தலைகீழாக உள்ளது.

இதில் வேதனைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, நீலகிரியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணமடைந்தபோது தமிழகத்தில் அதை மறைமுகமாக கேலியும், கிண்டலும் செய்து, மகிழ்ச்சி தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் ஏராளம். கொஞ்சமும் நாட்டுப்பற்று, ஈவு இரக்கம் இல்லாத அந்த தேச விரோத சக்திகள் மீது எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்” என்று அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!