பேரறிவாளன் விடுதலை குறித்து மறைமுக கருத்து… தந்தை ராஜிவ் காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கமான பதிவு..!!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 9:41 am

ராஜிவ் காந்தியின் 31வது நினைவு நாளில் பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தி மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 19ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

Perarivalan Gayathri Yuvaraj - Updatenews360

பேரறிவாளனின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கும் விதமாக, வெள்ளைத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் கூட நடத்தப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்சிகள், பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வருகின்றன. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, அடிக்கடி தமிழர்களின் நலன் குறித்து பேசும் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, இந்த விவகாரம் தொடர்பாக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ராகுல் காந்தி விடுத்த டுவிட்டர் பதிவில், பேரறிவாளன் விடுதலை குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Rahul - Updatenews360

அதாவது, நவீன இந்தியாவை உருவாக்கத் தேவையான கொள்கைகளை கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் எனது தந்தை என்றும், தந்தை ராஜிவ் காந்தி இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதராக திகழ்ந்தார் என்றும், எனக்கும், எனது சகோதரி பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என்று டுவிட் போட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் பேரறிவாளனை அவர் மன்னித்து விடுவதாகவும், இனி அவரது விடுதலைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது போல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி