‘ஜனநாயகம் பற்றி நீங்க பேசுவது காமெடி.. சில திமுக தலைவர்களும் ராகுலுடன் சிறை செல்வது உறுதி’ : CM ஸ்டாலினை எச்சரிக்கும் அண்ணாமலை..!!
Author: Babu Lakshmanan24 March 2023, 9:53 am
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என விமர்சித்தார். அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு விதிக்கப்ப்டட தண்டனையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம் அளித்துவிட்ட பின்னரும், ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரது பேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது.
எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும். திமுக என்றும் அவருக்கு துணை நிற்கும். இறுதியில் நீதியே வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ஒரு டிரால் வீடியோவையே சகித்துக் கொள்ள முடியாமல் கொந்தளித்த கட்சிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க தகுதியே இல்லை. கடந்த இரண்டு வருடமாக எதிர்கட்சி தலைவர்கள் மீது எத்தனை வழக்கு போட்டுள்ளீர்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.
ஜனநாயகம் குறித்து நீங்கள் பேசுவது நகைச்சுவை அளிக்கிறது. பொய் மற்றும் வெறுப்புகளை உமிழ்ந்து வரும் திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் விரைவில் ராகுல் காந்தியுடன் சிறை செல்வது உறுதி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0