ராகுலின் விருப்பத்தை திமுக நிறைவேற்றுமா…? கே.எஸ். அழகிரிக்கு புதிய தலைவலி…!!!
Author: Babu Lakshmanan30 December 2022, 7:47 pm
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி பரபரப்பு காட்டியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐவர் அணி
மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நிரந்தரமானது அல்ல, அது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது என்பதாலும், இதையும் கடந்து 10 மாதங்களுக்கும் மேலாக, தான் அப் பதவியில் நீடிப்பதால் அதன் அடிப்படையில் அவர் இப்படி மனம் நொந்து பேசி இருக்கலாம். எனினும் இதற்கான உண்மை காரணம் அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
குறிப்பாக கட்சியில் அவருக்கு எதிராக செயல்படும் ஐவர் அணி காரணமாகவே கே எஸ் அழகிரி விரக்தியுடன் இது போல் பேசியிருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த நவம்பர் 15-ம் தேதி கடுமையான மோதலும், கைகலப்பும் ஏற்பட்டது. மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. கே.எஸ். அழகிரியின் முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததால் அவருக்கு எதிராக சில தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர்களான திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் டெல்லிக்கே சென்று அழகிரியை உடனடியாக மாற்றும்படி கோரிக்கையும் வைத்தனர். அதற்கு பதிலடியாக கே.எஸ். அழகிரி தரப்பினரும், அழகிரியை மாற்றக்கூடாது என்று கூறி செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரனுக்கு எதிராக புகார்களை வரிசையாக அடுக்கினர். இதனால் கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து எந்த நேரமும் மாற்றப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது.
பேச்சு
இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ மற்றும் ‘கையோடு கை கோர்ப்போம்’ ஆகிய பிரசாரங்களை தமிழகத்தில் முன்னெடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மிக அண்மையில் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அழகிரி, “நான் தலைவராக இருக்கும் இந்த காலகட்டத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காக உண்மையாக கடுமையாக உழைத்து வருகிறேன். தேர்தல்களில் கூட்டணி கசப்புகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம்.
கடந்த முறை ராஜ்யசபா எம்பி சீட்டை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளித்தபோது எனக்கு அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் உரிமை இருந்தது. ஆனால் ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்தவுடன் அந்த பதவிக்கு நான் முயற்சி செய்யவே இல்லை. அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அப்போது மாநில தலைவர் என்ற முறையில் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டேன். நான் ராஜ்யசபா எம்பி பதவி கேட்டுத் தான் சந்திக்க முயற்சி செய்வதாக கருதி சோனியா கூட என்னை சந்திக்க தயங்கினார்.
ஆனால் ஒரு மாநில தலைவரை சந்திக்காமல் இருக்க முடியாது என்பதால் என்னை சந்தித்தார். அப்போது அவரிடம், கூட்டணியில் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்கிறார்கள். யாருக்கு தரலாம் என்று நான் கேட்டதும் என்னை ஆச்சரியமாக பார்த்தார், சோனியா.
நான் எந்த பதவிக்கும் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. பலர் தங்களுக்குப் பதவி கேட்டும் எனது பதவியை பறிக்க கோரியும் டெல்லிக்கு போய் வருகிறார்கள். ஆனால் நான் மாநில தலைவராக இருக்கும் காலத்தில் பதவி கேட்டு டெல்லிக்குப் போனதில்லை. ஐந்தாறு முறைதான் நான் டெல்லிக்கே போயிருக்கிறேன். பதவி கேட்டு யார் வீட்டு வாசல்படியையும் மிதிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான். எனது இந்த தலைவர் பதவி இருக்கையும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்பது எனக்குத் தெரியும். இன்று மாலையே கூட மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படலாம். அப்படி மாற்றினால் புதிய தலைவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு திருப்தியுடன் செல்வேன்” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.
புதிய தலைவர்
அவர் இப்படி மிகுந்த உருக்கமாக பேசி இருப்பது அரசியல் ஆர்வலர்களால் வேறு விதமாக பார்க்கப்படுகிறது.
” கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 10ல் போட்டியிட்டு 9 இடங்களிலும், 2021 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு 18 இடங்களிலும் கணிசமான வெற்றியைப் பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்துள்ளது. என்ற போதிலும் தமிழகத்தில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாலும், அவர் தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத் தட்ட 4 ஆண்டுகள் ஆவதாலும், அவரை மாற்ற தலைமை முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் மாநிலத்தில் ஆளும் திமுகவுடன் என்னதான் கே எஸ் அழகிரி நெருக்கம் காட்டினாலும், நட்பு பாராட்டினாலும் டெல்லி மேலிடம் அவருக்கு கொடுத்த முக்கிய ‘டார்கெட்’ ஒன்றை நிறைவேற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை இதுவரை அவர் சரிவர பயன்படுத்தவில்லை என்ற அதிருப்தி இருப்பதாகவும் தெரிகிறது.
அது 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பானது.
எதிர் வரும் தேர்தலில் உத்தரப்பிரதேசம்,கேரளா மாநிலங்களில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு, பெரிதும் தயக்கம் காட்டி வருகிறார். ஏனென்றால் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடியின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவது மிகக் கடினம் என்பது ராகுலுக்கு நன்றாகவே தெரியும். அதேபோல கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் நின்றால் கம்யூனிஸ்டுகள் இந்த முறை தன்னை ஜெயிக்கவிட மாட்டார்கள் என்றும் அவர் கருதுகிறார்.
ராகுல் போட்டி
இப்போதைக்கு மாநிலக் கட்சிகளில் திமுகதான் காங்கிரசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்று ராகுலும், சோனியாவும் கருதுகின்றனர். அதனால் தமிழகத்தில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ராகுல் நிற்பதற்கு, திமுக தலைமையிடம் சம்மதம் பெற்றுத் தரும்படி கே எஸ் அழகிரிக்கு டெல்லி காங்கிரஸ் தலைமை சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியதாக சொல்கிறார்கள்.
ஆனால் என்னதான் திமுகவின் ஆட்சியை பாராட்டியும் புகழ்ந்தும் பேசினாலும் இதுவரை கே எஸ் அழகிரியால் இதற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை கரூரை திமுகவிடம் கேட்டுப் பெற்று விட்டால், அத் தொகுதியின் எம்பி ஜோதிமணிக்கு உடனடியாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக கே எஸ் அழகிரி அதற்கான முயற்சியில் இறங்காமல் விட்டிருக்கலாம். அதேநேரம் இதை தகுந்த தருணமாக பயன்படுத்தி தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஐந்தாக திமுக குறைத்து விடுமோ? என்ற பயமும் அழகிரிக்கு வந்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் திமுக இதற்கு ஒப்புக்கொண்டால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கட்டாயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்படும். ஆனால் சமீப காலமாக தனித்தன்மையோடு திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று பேசி தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வரும் திமுக, கரூரில் ராகுல் போட்டியிட விரும்புவதை ஏற்குமா? என்பது சந்தேகம்தான்!…”என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.