திருமாவுக்கு வேட்டு வைத்த ராகுல்?…தேர்தல் கணக்கு அம்பேல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 9:47 pm

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ
வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை கூட்டத்தில் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் பரபரப்பு பேச்சு

மராட்டியத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்க வேண்டும் என்று மராத்தி மொழி பேசும் மக்கள் அழைப்பதாகவும், ஆனால் தனக்கு இந்தி தெரியாததால் அந்த மாநிலத்தில் கட்சி தொடங்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் இன்னொரு தகவலையும் கூறியிருக்கிறார்.

அவர் ஏன், எதற்காக இப்படிச் சொன்னார், காங்கிரசுடன் அவருக்கு ஏதாவது திடீர் மன கசப்பா? என்ற கேள்விகளும் இதனால் எழுந்துள்ளது. அதேநேரம் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் திருமாவளவனுக்கு நெருக்கமான நட்பு உள்ள நிலையில் அவர் இப்படி கூறியிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

குறி வைத்து தாக்கி பேசும் ராகுல்

இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பாட்னா நகரில் எதிர்க்கட்சிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத ஒரு சில கட்சிகளை குறி வைத்து கடந்த ஒரு வாரமாக மிகவும் கடுமையாக தாக்கி பேசி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

குறிப்பாக கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல், இதுபோன்ற தாக்குதலில்
ஈடுபடுவது அதிகரித்தும் விட்டது.

ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இவற்றில் வலிமையை காட்டினால்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில், அத்தனை எதிர்க்கட்சிகளும் தங்களைத் தேடி வரும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கணக்காக உள்ளது.

இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜகதான் காங்கிரசின் பிரதான எதிரி. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது இடம் கிடைக்குமா? அல்லது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவோமா? என்கிற நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

தெலுங்கானாவில் பரபர

இன்னும் சொல்லப்போனால் தெலுங்கானா மாநிலம் 2014ல் உருவாக்கப்பட்ட பின்பு அங்கு ஒரு முறை கூட காங்கிரசால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
இத்தனைக்கும் தெலுங்கானாவுக்கு தனி மாநில அந்தஸ்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் வழங்கியது.

இந்த நிலையில்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது. ஏற்கனவே அவருடைய கட்சியின் பெயர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்று இருந்தது. ஆனால் தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காக கடந்தாண்டு அக்டோபர் 5-ம் தேதி கட்சியின் பெயரை அவர் மாற்றிக் கொள்ளவும் செய்தார்.

இதற்கான பிரமாண்ட விழா ஹைதராபாத்தில் நடந்தபோது, அதில் பங்கேற்ற இரண்டு முக்கிய தலைவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் ஆகியோர்தான். இந்த விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் கே சி சந்திரசேகர ராவ், விசிக தலைவரை வானளாவ புகழ்ந்தும் தள்ளினார். திருமாவளவன் போன்றதொரு சிறந்த போராட்டவாதியை இதுவரை
நான் கண்டதே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

கேசிஆர் மீது கடும் விமர்சனம்

இப்படி கே சி சந்திரசேகர ராவ் அன்று கூறியதை தகர்க்கும் விதமாகத்தான் தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் ஆவேசமாக அவரை சாடினார்.

ராகுல் பேசும்போது, “சமீப நாட்களாக பாரத ராஷ்டிர சமிதியின் செயல்பாடு அனைத்தும் பாஜகவின் கொள்கைகள் மற்றும் செயல்களுக்கு அடிபணிந்தும், அனுசரித்தும் போவதுபோல் இருக்கிறது. அது பாஜகவின் B டீமாகவும் செயல்பட தொடங்கி விட்டது. பாரத ராஷ்டிர சமிதிக்கு மாற்றாக பாஜக ஆதரவு சமிதி
என்று கட்சியின் பெயரை மாற்றி இருக்கலாம்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் கட்சித் தலைவர்கள் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி அது பாஜகவிடம் சரணடைந்து விட்டது, இனி பிஆர் எஸ் கலந்து கொள்ளும் எந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் காங்கிரஸ் பங்கெடுக்காது. இதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

கேசிஆர் தன்னை ஒரு ராஜாவாக கற்பனை செய்து, தெலுங்கானாவை அவரது ராஜ்ஜியமாக எண்ணி கற்பனையில் மிதந்து வருகிறார். பாரத ராஷ்டிர சமிதி போல நாடாளுமன்றத்தில் ஒருபோதும், மக்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த திட்டங்களிலும் பாஜகவிற்கு காங்கிரஸ் துணை போனதில்லை. எந்த சூழ்நிலையிலும் துணை போகாது.

முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியின் ரிமோட் கண்ட்ரோலாக செயல்பட்டு வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் ஊழல்வாதிகள், லஞ்சம் பெறுபவர்கள் என ஏழை மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைப்பவர்களை தோற்கடித்து ஏழை மக்கள், சிறுபான்மையினர், விவசாயிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி நடத்தும்.

கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும். இங்கே பா.ஜனதா இல்லை. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பா.ஜனதாவின் ‘B’ அணிக்கும் இடையில்தான் போட்டி” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

திருமாவின் கோபத்துக்கான காரணம்

“ராகுல்காந்தியின் பேச்சையும், 2024 தேர்தலில் தென் மாநிலங்களில் விசிக வேட்பாளர்களை நிறுத்தும் என்று திருமாவளவன் அறிவித்திருப்பதையும் ஒன்றோடு ஒன்றாக ஒப்பிட்டு பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புரியும். காங்கிரசின் ஆதரவு இல்லாத நிலையிலேயே தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பட்டியலின மக்களின் ஓட்டுகளை தனது கட்சியால் அறுவடை செய்து விட முடியும். அதன் மூலம் தேர்தலில் வெற்றியும் பெறலாம் என திருமாவளவன் உறுதியாக நம்புகிறார் என்பது விளங்கும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இதற்கு முக்கிய காரணம் பாட்னா நகரில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தென் மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதாக இருக்கலாம். அது மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி திருமாவளவனுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் விடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்க வாய்ப்புள்ளது என்று விசிக கருதுகிறது. அதேநேரம் தெலுங்கானாவில் தனது கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் போனதும் திருமாவளவனுக்கு மிகுந்த எரிச்சலை தந்திருக்கும். இதனால் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி இரு கட்சிகளுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தெலுங்கானா மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என்று திருமாவளவன் அறிவித்ததன் பின்னணியாக இருக்கலாம்.

திருமாவின் தேர்தல் கணக்கு

இந்த மூன்று மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கைப்பற்றி விட்டால் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் தன்னைத் தேடி வரும் என்று விசிக நினைக்கிறது. அது மட்டுமல்ல மதுரை மேலவளவு கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது எதிர்காலத்தில் விசிக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும். கோட்டையில் நமது கொடி பறக்கும் என்று திருமாவளவன் பரபரப்பு காட்டி இருக்கிறார். இதனால் இப்போது பாஜகவை எதிர்ப்பதற்காக மட்டுமே திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்று இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

தென் மாநிலங்களில் தனித்தோ கூட்டணி அமைத்தோ போட்டியிடுவோம் என்று திருமாவளவன் கூறுகிறார். தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். அதேநேரம் காங்கிரசுடன் கூட்டு சேர்த்தால் சந்திரசேகர ராவின் நட்பு முறியும்.

கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை களம் இறக்குவது விசிகவுக்கு கனவிலும் நடக்காத காரியம். ஆந்திராவில் நான்காவது இடத்தில் உள்ள காங்கிரஸ் வேண்டுமென்றால் விசிகவை தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்பலாம். அப்போதும் கூட ஒரு நாடாளுமன்ற தொகுதியை திருமாவளவன் கட்சிக்கு ஒதுக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஆப்பு வைத்த ராகுல் காந்தி

அப்படியென்றால் இந்த மூன்று மாநிலங்களிலும் மக்களுக்கு பரிச்சயமே இல்லாத சிறு சிறு கட்சிகளுடன்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி சேர வேண்டி வரும். இதற்கு அந்த கட்சி தனித்தே போட்டியிட்டு விடலாம்.

என்றபோதிலும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்த திருமாவளவனுக்கு, ராகுலின் பேச்சு ஆப்பு வைத்து விட்டது என்றே சொல்லவேண்டும்.
இதனால் பி ஆர் எஸ் கட்சியுடன் கூட்டு சேர முடியாத நிலையும் அவருக்கு உருவாகிவிட்டது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கானாவில் காங்கிரஸையும், பாரத ராஷ்டிர சமிதியையும் ஒரே நேரத்தில் புறக்கணிக்கும் நிலை திருமாவளவனுக்கு ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் ஒன்றுதான்!

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 355

    0

    0