ராஜராஜ சோழன் இந்துவா..? இல்லையா..? ‘இது வெற்றிமாறன், கமலின் கவனத்திற்கு’… டிரெண்டாகும் சோ. ராமசாமியின் வீடியோ!!
Author: Babu Lakshmanan6 October 2022, 6:55 pm
ராஜராஜ சோழன் இந்துவா..? இல்லையா..? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், மறைந்த முன்னணி நடிகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ.ராமசாமி பேசும் வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.
வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், அண்மையில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவணப்பட கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது, இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்,” எனப் பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் இந்து இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அதேவேளையில், ராஜராஜ சோழன் இந்து கிடையாது என்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், திமுக உள்ளிட்ட கட்சியினரும், வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்னும் மதமே கிடையாது என்றும், சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவுகளாகத்தான் இருந்ததாக ஆகியவையும் ஹிந்து மதத்தை சேர்ந்தவை தான் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ராஜராஜ சோழன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை விளக்கும் விதமாக, மறைந்த முன்னணி நடிகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ.ராமசாமி பேசும் வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வீடியோவில், முன்பு ஒரே ஒரு மதம் மட்டும் இருந்ததால், அதற்கென தனி பெயர் வைக்கவில்லை என்றும், தற்போது மதங்கள் பலவாக பிரிந்ததால் தான், அதற்கு பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.