விடுதலையானார் நளினி… 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது… கொட்டும் மழையில் மகிழ்ச்சியுடன் ஜெயிலிலில் இருந்து வெளியேறினார்
Author: Babu Lakshmanan12 November 2022, 5:11 pm
வேலூர் ; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, தனது தாயாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிபந்தனையின் பேரில் பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வெளிவந்த நளினி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 10 மாதமாக அவர் பரோலில் தனது தாயார் பத்மா உடல் நிலையை கவனித்து வந்த சூழ்நிலையில், நேற்று அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், பரோலில் உள்ள நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.