ராஜ்யசபா எம்பி தேர்தல்.. ஒரு எம்பி சீட்டுக்கு கெஞ்சும் காங் : திமுகவுக்கு திடீர் தலைவலி!!
Author: Udayachandran RadhaKrishnan27 March 2022, 7:32 pm
டெல்லி மேல்-சபையில் எம்பிக்களாக உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
75 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாத இறுதியில் முடிவடைகிறது. அதற்கு முன்பாகவே அந்த இடங்களுக்கு புதிய எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஜூலை இறுதியில் குடியரசுத் தலைவர் தேர்தல்
ஏனென்றால் ஜூலை மாத கடைசியில் புதிய குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என்பதால் அவரை தேர்ந்தெடுக்க இந்த எம்பிக்களும் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு தேர்தல்
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 2021 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எம்எல்ஏவுக்கு போட்டியிட்டு ஜெயித்ததால் தங்களது ராஜ்ய சபா எம்பி பதவிகளை கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் ராஜினாமா செய்தனர்.
இந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.
அப்போது வைத்தியலிங்கத்தால் காலியான இடத்துக்கு ராஜேஷ்குமாரையும், கே.பி.முனுசாமியால் காலியான இடத்துக்கு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமுவையும் திமுக நிறுத்தி வெற்றிபெற வைத்தது.
வைத்தியலிங்கத்தின் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜேஷ்குமாரின் ராஜ்யசபா பதவி காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது.
திமுக – 4, அதிமுக – 2
அதன்படி தமிழகத்தில் காலியாகும் 6 எம்பி இடங்களுக்கு ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். தமிழக சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு இருக்கும் வலிமையை பொறுத்து தற்போது திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதில் திமுக, அதிமுக சார்பில் யார்? யார்? நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 18 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தங்கள் சார்பில் ஒரு எம்பி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் விரும்புகிறார்.
காய் நகர்த்தும் ப.சிதம்பரம்
அந்த எம்பி பதவியை கைப்பற்ற காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் மறைமுகமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் 2016-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார் என்பதுதான். அவருடைய பதவிக்காலம் வருகிற ஜூலை முதல் வாரம் முடிவடைகிறது.
தவிர சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கும் மராட்டியத்தில் ஜூலை முதல் வாரம் 6 ராஜ்ய சபா எம்பி இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.
என்றபோதிலும் அந்த மாநிலத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றே சொல்லவேண்டும்.
தமிழகத்தை குறி வைத்த ப.சிதம்பரம்
ஏனென்றால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று மராட்டிய மாநில காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இதனால்தான் தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்பி இடங்களில் திமுக ஆதரவுடன் ஒரு இடத்தை தனக்காக கைப்பற்ற சிதம்பரம் திட்டமிடுகிறார் என்கிறார்கள். காங்கிரசுக்கு 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். 6-வது சீட்டை கைப்பற்ற திமுகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்காக திமுகவிடம் சீட் கேட்க சோனியாவை சிதம்பரம் அணுகி வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி திமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை
இந்த நிலையில்தான் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை ஏப்ரல் 2-ம் தேதி திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பும் விடுத்திருக்கிறது.
அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவை, திமுக தலைவர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் சந்தித்து அரசியல் ரீதியான விஷயங்களை கலந்தாலோசிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த நேரத்தில் ஒரு எம்பி இடத்தை தங்களுக்கு விட்டுக் கொடுக்கும்படி திமுக தலைமைக்கு சோனியா அழுத்தம் அளிப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது. இதனால் ஸ்டாலின் டெல்லி பயணம் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறும்போது,
“டெல்லி ராஜ்ய சபாவிற்காக ஜூன் மாதம் 6 எம்பி இடங்களுக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலினின் டெல்லி வருகை தேசிய அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை எதிர்க் கட்சிகளிடையே ஏற்படுத்தி இருக்கிறது.
அதேநேரம் கடந்த சில மாதங்களாகவே, ஸ்டாலின் இந்திய பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை சொல்லி வருகின்றன. தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக உள்ள காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாகவே இதை அண்மைக்காலமாக தொடர்ந்து பேசியும் வருகிறார். திமுகவின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் இதுபோல் இப்போது ஆர்வத்துடன் பேசுவதைக் காண முடிகிறது.
பிரதமர் ரேசில் ஸ்டாலின்
அதுவும் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் ஸ்டாலின் இந்திய பிரதமராக வேண்டும் என்கிற குரல் தற்போது பலமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
அதனால்தான் சோனியா- ஸ்டாலின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உண்மையிலேயே ஸ்டாலினுக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் போல பிரதமராக வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருக்கிறதா?… அல்லது 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்தது போல இப்போதும் வெளிப்படையாக சொல்லுமா? தமிழகத்தில் காங்கிரஸ் தலைமை கேட்கும் ஒரு எம்பி இடத்தை திமுக விட்டுக் கொடுக்க முன் வருமா? என்பதற்கும் இந்த சந்திப்பில்
விடை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சோனியாவுக்கு ஓகே சொல்வாரா ஸ்டாலின்?
ஆனால், சோனியாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு எம்பி சீட்டை ஸ்டாலின் தருவாரா என்பது நிச்சயமல்ல. திமுக தலைவர்களில் சிலரும் இப்படி கூறுகின்றனர். திமுகவிற்குள் பலர் எம்பி. பதவிக்காக காத்திருக்கும் நிலையில், காங்கிரசுக்கு எப்படி விட்டுத் தர முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒருவேளை காங்கிரசுக்கு சீட் கிடைத்தால் அது முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கா, தமிழக காங்., தலைவர் அழகிரிக்கா அல்லது முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்சுக்கா என அக்கட்சிக்குள் பெரும் விவாதமே நடக்கிறது. ஆனால் இந்த எம்பி பதவியை, இளைஞர்களுக்கு விட்டுத் தர வேண்டும் என அக்கட்சியின் இளம் தலைவர்கள் பலர் விரும்புகின்றனர்.
சோனியா, ராகுல் அதிருப்தி
கோவாவில் காங்.ஆட்சியை அமைத்து காட்டுகிறேன் என, சோனியா, ராகுல், பிரியங்காவிடம், அம்மாநில தேர்தல் பொறுப்பாளரான சிதம்பரம் உறுதி அளித்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், 2017 தேர்தலை விட குறைவான இடங்களிலேயே காங். அங்கு வென்றது. இதனால், சோனியாவும், ராகுலும் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்கிறார்கள்.
அதனால் திமுக எம்பி சீட் வழங்கினாலும் அதை சிதம்பரத்திற்கு தரக்கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
திமுகவுக்கு புதிய தலைவலி
அதேசமயம் திமுகவை பொறுத்தவரை டெல்லி ராஜ்யசபாவில் தனது பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே விரும்பும். குடியரசுத் தலைவர் தேர்தலின்போது எம்பிக்களின் பலம் தங்களுக்கு ராஜ்யசபாவிலும் தேவை என்பதை திமுக நன்றாகவே உணர்ந்துள்ளது. அதனால் காங்கிரஸ் எதிர்பார்ப்பது போல ஒரு எம்பி சீட் திமுகவிடம் இருந்து கிடைப்பது சந்தேகம்தான். ஆனால் சோனியாவே நேரடியாக இதுபற்றி ஸ்டாலினுடன் பேசுவார் என்பதால் திமுகவுக்கு இது தலைவலி தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதுமட்டுமன்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் திரள திமுக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினிடம் சோனியா வற்புறுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதுவும் திமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
ஏப்ரல் 2ம் தேதி தேசிய அரசியலில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!