வேலைநிறுத்தத்தால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி… தெரிந்தும் இதை செய்துள்ளீர்கள்… இது திமுக அரசின் பொறுப்பற்ற தனம்… கொந்தளிக்கும் ராமதாஸ்..!!
Author: Babu Lakshmanan28 March 2022, 1:30 pm
சென்னை : தமிழகத்தில் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் பொறுப்பற்ற தனத்தால், மக்களும், மாணவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்களும், மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதைப் போக்க தமிழக அரசும், போக்குவரத்துத் துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கடமை தவறிய செயல் ஆகும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.
வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல், அரசின் சொத்துகளை பணமாக்கல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, வருங்கால வைப்புநிதிக்கான வட்டி குறைப்பு, ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிலைப்பு உள்ளிட்ட இந்த வேலை நிறுத்தத்திற்காக முன்வைக்கப்படும் 12 கோரிக்கைகளும் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. அதேநேரத்தில் இத்தகைய போராட்டங்களால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் பா.ம.க.வுக்கு உடன்பாடு இல்லை.
வழக்கமாக வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது வங்கிச் சேவைகள் மட்டுமே பாதிக்கப்படும். அரசுப் பேருந்துகளின் சேவை வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட வரலாறு கடந்த 14 ஆண்டுகளில் இல்லை. ஆனால், இப்போது நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்றிருப்பதால் தமிழகத்தில் போக்குவரத்துச் சேவை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தாலும் கூட கள நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. 10% பேருந்துகள் கூட இயக்கப் படாததால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பேருந்து நிறுத்தங்களில் காலை 10 மணியைக் கடந்தும் காத்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. சென்னையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சென்னையில் தனியார் பேருந்து சேவை இல்லாததால் மக்களின் பாதிப்பு இன்னும் கடுமையாக உள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலும் அதிகாலை முதல் காத்துக் கிடக்கின்றனர். தானிகள் இயக்கப்படாத நிலையில், இயங்கும் ஒரு சில தானிகளின் கட்டணம் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் போராட தொழிற்சங்கங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதேநேரத்தில் அத்தகைய போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையை செய்வதில் தமிழக அரசு தவறி விட்டது. ஒருபுறம் இந்த வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. மற்றொருபுறம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது. ஆனால், அதில் அரசு உறுதியாக இல்லாதது தான் மக்களின் அவதிக்கு காரணமாகும்.
தமிழக அரசு நினைத்திருந்தால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து இருக்கலாம். வழக்கமாக வேலைநிறுத்தங்கள் அறிவிக்கப்படும் போது போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துத் துறை செயலாளர், ஆணையர், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணிமனைகளில் முகாமிட்டு பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்வார்கள். ஆனால், இம்முறை ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. அதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது.
தமிழ்நாட்டில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அந்தத் தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை. வேலைநிறுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு இருந்தால், குறைந்தபட்சம் தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்திருக்கலாம். தமிழக அரசின் வெற்றியை விட தொழிற்சங்கத்தின் வெற்றியையே ஆட்சியாளர்கள் முக்கியமாக கருதியதால் தான் பொதுமக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. இது முற்றிலும் தவறு.
தமிழக அரசு அதன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும். திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
0
0