மீனவர்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம்… எப்போதும் என் வீட்டு கதவு திறந்திருக்கும் ; மீனவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 1:57 pm

ராமநாதபுரம் ; மீனவர்கள் மீது பிரதமர் அதிக அக்கறை காட்டுவதாகவும், மீனவர்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தேவிபட்டினத்தில் மீனவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இரண்டு நாள் பயணமாக நேற்று இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். முதல் நாளான இன்று காலை மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் மாலை இராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினம் நவபாசன நவகிரக கடலில் இறங்கி பூஜை செய்து வழிபட்டார். அதன்பின் தனியார் கல்யாண மண்டபத்தில் நாட்டுப் படகு மீனவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ரவி: மகாபாரத காலத்தில் இருந்தே மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு முக்கியமானது. பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து கடலில் மீனவர்கள் மீன் பிடித்து கரைத்திருப்புகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மீனவர்களுக்கு தற்போது உள்ள திட்டங்களை காட்டிலும் இன்னும் அதிகமான திட்டங்கள் செய்து கொடுக்க வேண்டும். அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்து விரைவில் அதிகமான திட்டங்களை மீனவர்களுக்காக அறிவிப்பார் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், அடித்தட்டு மக்களின் நலன் குறித்து பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருவதால் அவர்களின் வாழ்வாதாரம் விரைவில் மேலோங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீனவ சமூகத்தில் டாக்டர், இன்ஜினியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய துறைகளில் மிகவும் குறைவாகவே உள்ளனர். மீனவ சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் பல துறைகளில் பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் 25 வருடங்களில் இந்தியா பல முன்னேற்றத்தை அடையும் என்றார்.

மேலும், இன்று மீனவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டேன். இது குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசு கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றவர். ராஜ் பவனில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் மீனவர்கள் கலந்து கொள்ள வேண்டும், ராஜ் பவனில் அடுத்து நடக்க இருக்கும் அரசு நிகழ்ச்சிகளில் மீனவர்கள் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் எந்த நேரமும் உங்களது குறைகளை என்னிடம் கூறலாம். மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என்றார். ஆளுநர் ஆர் என் ரவியிடம் தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை இருந்து வருவதால் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறினார்.

இதனை கேட்ட ஆளுநர் மக்களுக்கு குடிநீர் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை என்பதால் உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பேசிக் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார். மேலும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக ஆளுநரை வரவேற்கும் விதமாக மீனவ குழந்தைகள் செய்த யோகாசனத்தை மேடையில் இருந்து கண்டு ரசித்தார்.

யோகா செய்து காட்டிய குழந்தைகளை ராஜ் பவனுக்கு அழைத்தார். ஆளுநரின் இந்த உரையை தேவிபட்டினம் விவேகானந்த வித்தியாலையா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் விஜயேந்திர பாரதி மொழி பெயர்த்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 415

    0

    0