ரேஷன் கடைகளில் இனி சிறு தானியங்கள் விற்பனை… தமிழக அரசு அறிவிப்பு : முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் செயல்படுத்த திட்டம்..!!
Author: Babu Lakshmanan27 January 2022, 6:17 pm
சென்னை : ரேஷன் கடைகளில் ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் எண்ணெய், சர்க்கரை, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சிறு தானியங்களையும் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு அண்மையில் பரிசீலனை செய்து வந்தது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் ராகி, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி, கம்பு, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை கொள்முதல் செய்து, அதனை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் விதமாகவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டும் வகையிலும் தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.