எதிரிகள், துரோகிகளுக்கு மரணஅடி… இபிஎஸ்-க்கு இருக்கும் தைரியம்… வேறு எந்த தலைவருக்கும் இல்ல ; ஆர்பி உதயகுமார்

Author: Babu Lakshmanan
6 March 2024, 12:03 pm

மதுரை ; நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் அறிவிக்கும் வேட்பாளர் பட்டியல் இந்தியாவே கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- வேட்பாளரை தேடும் அதிமுக என்று ஒரு கற்பனையான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. அதிமுகவை தொண்டர்கள் பலத்தோடு எடப்பாடியார் வலிமையோடு அழைத்துச் சென்று வருகிறார்.

இதில் ஊடக மேலாண்மை என்று திமுக கையாளுகிற அந்த வித்தையில், இன்றைக்கு உண்மை சில நேரங்களில் உறங்க வைத்துவிட்டு, வதந்திகள் இன்றைக்கு எட்டுக்கால் பாய்ச்சலிலே தமிழகத்திலே மூளை முடுக்கெல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை, இந்தியாவிலேயே ஏழை எளிய சாமானிய மக்களுக்காக புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் காலத்திலே இந்தியாவின் மூன்றாவது மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்த இயக்கத்தை, இன்றைக்கு ஒரு சாமானியராக இந்த இயக்கத்தை தலைமை தாங்கி, தொண்டர்களுடைய  ஆதரவோடு, மக்களுடையசெல்வாக்கோடு, வழிநடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடியார்  ஒரு சாமானியர் என்பதினால் இது போன்ற வதந்தி செய்திகளை தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.

இன்றைக்கு அதிமுக தலைமை கழகத்தில் ஆர்வத்துடன், கிளைக்கழக நிர்வாகிகள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை போட்டியிட விண்ணப்பத்தை செலுத்தி வருகிறார்கள். ஏறத்தாழ  40 தொகுதிகளில் போட்டியிட 3,500 மேற்பட்டோர் விண்ணப்பம் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.

அம்மாவுடைய காலத்திலே எப்படி 40 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கு விண்ணப்பங்கள் அளிப்பார்களோ. அதே போல் இன்றைக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் எடப்பாடியார் நிற்பது போல கழகத்தினர் விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள்.

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை எடப்பாடியார் அறிவிக்கும் போது, இந்தியாவே பேசும் வகையில், கவனத்தில் ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் பட்டியல் இருக்கும். யாரையோ திருப்திபடுத்த சில ஊடகங்கள் அதிமுகவை மட்டம் தட்டி செய்தி வெளியிடுவது தொண்டர்களின் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியார் செய்யும் மக்கள் சேவைக்கும், மகத்தான பணிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நீங்கள் எடப்பாடியாரை பாராட்டு மழை பொழிய வேண்டாம், குறைந்த பட்சம் அவர் உழைப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள். இன்றைக்கு 68,000க்கும் மேற்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளும், ஒவ்வொரு பூக்களில் 69 பேர் கொண்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைத்துள்ளார். இன்றைக்கு தமிழகத்திலே அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி வலுவான கட்டமைப்பை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்

இன்றைக்கு மாணவர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கவசமாக எடப்பாடியார் உள்ளார். திமுகவின் அவலங்களை எல்லாம் நெஞ்சுரத்துடன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ,விலைவாசி உயர்வு போதை பொருள் கடத்தல் பல்வேறு பிரச்சினைகளுக்கு கண்டன  போராட்டங்களை நடத்தி வருகிறார்.

மத்திய, மாநில என இரண்டு ஆளும் கட்சிகள் ராட்சதபலத்தோடு உள்ளன. அதை எதிர்த்து களம் கண்டு வருகிறார். அதில் நிச்சயம் வெற்றி பெறுவார். அதிமுகவை ஒரு ஜனநாயக பாதையில் அழைத்துச் சென்று வருகிறார். ஆனால் யாரையோ திருப்திபடுத்த செய்திகள் வெளியிடுவது மனவேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் அவலங்கள் எல்லாம் எதிர்த்து எடப்பாடியார் போராடி விடுகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டுகொள்ளாமல் வாய்பூட்டு சட்டம் போட்டது போல அமைதியாக உள்ளது. தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்றவற்றில் அணைகட்ட அங்குள்ள அரசுகள் முயற்சிக்கிறது. அதை எதிர்த்து எடப்பாடியார் கடுமையாக குரல் கொடுக்கிறார். வேறு எந்த கட்சியும்  வாய் திறந்து போராடுகிறார்களா? குறிப்பாக இளைய சமுதாயத்தை கேள்வி குறியாக்கும் போதை பொருள் குறித்து ஏதாவது வாய்திறந்து பேசினார்களா?

அதிமுகவை அழிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இருந்து காணாமல் செய்ய வேண்டும் என்று நினைத்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மரண அடி கொடுக்கும் வகையில் நெருப்பாற்றில் நீந்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும் என கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…