இதெல்லாம் பத்தாது, 2014ம் ஆண்டை விட அதிகம் : நீங்க குறைச்சுட்டு எங்கள குறைக்க சொல்வதுதான் கூட்டாட்சியா? தமிழக நிதியமைச்சர் காட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2022, 11:05 am
பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.
மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், இதற்கு த்தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடிகொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2014-இல் இருந்து பெட்ரோல் மீதான மத்திய வரிகளை லிட்டருக்கு ரூ. 23 (+250 சதவிகிதம்) மற்றும் டீசல் மீதான மத்திய வரிகளை லிட்டருக்கு ரூ. 29 (+900 சதவிகிதம்) உயர்த்தியபோது மத்திய அரசு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை, எந்தவொரு மாநிலங்களிடமிருந்தும் கருத்து கேட்கவில்லை. தற்போது உயர்த்தியதிலிருந்து 50 சதவிகிதம் விலைக் குறைப்பு செய்துவிட்டு, மாநிலங்களை விலைக் குறைப்பு செய்யுமாறு அறிவுரை கூறுகிறார்கள். இது கூட்டாட்சியா?’ என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது, பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். அதன்படி, வரி குறைந்த பிறகும் 2014ஆம் ஆண்டை விட மத்திய அரசின் வரிகள் அதிகமாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டைவிட பெட்ரோல் டீசல் மீதான வரி 10.42ம், டீசல் மீதான வரி 12.23 அதிகமாக உள்ளது. பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு அறிவிப்பின் மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.800 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.