இதென்ன கருமம்… முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுங்க : பெண் அமைச்சர் காட்டம்!!!
Author: Udayachandran RadhaKrishnan29 December 2022, 1:09 pm
நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நெரிசல் காரணமாக 8 பேர் பலியான சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா இன்று காலை திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர். கோயிலுக்கு வெளியே அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நேற்று இரவு நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காகவே அதிக தொண்டர்களை வரவழைத்து கட்டுக்கடங்காத கூட்டத்தை கூட செய்து நடைபெற்ற துயரத்திற்கு காரணமாக அமைந்து விட்டார். சரியான விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு முழு காரணம் சந்திரபாபு நாயுடு மட்டும்தான். இதனால் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
அதேபோல் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 கோடியும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறினார்.