பத்திரப்பதிவு அலுவலக ரெய்டால் செந்தில் பாலாஜிக்கு சிக்கலா…? அதிரடி காட்டும் வருமானவரித்துறை… திண்டாட்டத்தில் திமுக….!

Author: Babu Lakshmanan
6 July 2023, 8:00 pm

சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரப்பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்ற தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்துவது அபூர்வம். எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதுண்டு. ஆனால் அதற்கு மாறாக இது நடந்துள்ளது.

செங்குன்றத்திலும், உறையூரிலும் ஒரேநேரத்தில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து
20 மணி நேரம் இந்த சோதனையில் ஈடுபட்டு மொத்தம் 3000 கோடி ரூபாய் அளவிற்கான பத்திரப் பதிவுகளுக்கு கணக்கே காட்டவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர். நள்ளிரவு நேரம் முதல் விடிய விடிய இந்த சோதனை நீடித்ததையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதுவும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023ம் ஆண்டு மார்ச் வரையிலான
பத்திரப்பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது இந்த உண்மை
வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் 30 லட்சம் ரூபாய்க்கும் மேலான பண பரிமாற்றம் செய்துகொண்ட பத்திரப்பதிவுகளுக்கு முறையாக கணக்கு காட்டப்படவேண்டும் ஆனால் பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட பான் கார்டு மற்றும் ஆதார் இல்லாமலேயே பத்திரப்பதிவு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த சோதனை நடந்திருக்கிறது.

இதில் செங்குன்றத்தில் 2000 கோடிக்கும், உறையூரில்1000 கோடி ரூபாய்க்கும் பத்திர பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக 30 லட்ச ரூபாய்க்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பத்திரப் பதிவின்போதும் வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவர் இருவரும் பான் எண்ணை குறிப்பிட்டு, அட்டையின் நகலை இணைக்கவேண்டும். பான் எண் இல்லாதவர்கள் வருமான வரித் துறையின் படிவம் ’61-ஏ’வை பூர்த்தி செய்து சுய உறுதிமொழி தரவேண்டும்.

ஆனால் உறையூர் மற்றும் செங்குன்றம் சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் மிக அதிக அளவில் படிவம் 61-ஏவை அளித்து பத்திரப் பதிவுகள் நடந்திருப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நில விற்பனை 42 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்தும், பெருமளவில் பணப்பரிமாற்றத்தின் கீழ் நில பத்திரப்பதிவுகள் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான நிதி அறிக்கையை சார் பதிவாளர்கள் சமர்ப்பிக்க தவறியதால் எழுந்த சந்தேகத்தினாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டை நடத்தி இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

சரி! இந்த சந்தேகம் வருமானவரித் துறையின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு எப்படி திடீரென வந்தது? என்ற கேள்விக்கான விடை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது.

கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜுன் 2-ம்தேதி முடிய வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் கரூர் வீடு, உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்கள் என்று தொடர்ந்து எட்டு நாட்கள் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி
சோதனை நடத்தினார்கள் அல்லவா?… அப்போது ஏராளமான முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

குறிப்பாக கரூர் ஆண்டான் கோவில் கிழக்கு கிராமப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில் 11 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதையும் அந்த அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதற்கு அசோக்குமாரின் மனைவியும், மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் இதனால்தான் இந்த வழக்கில், செந்தில்பாலாஜி, அசோக்குமார் அவர்களது மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினரையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றிய ஆவணங்களில் பெரும்பாலானவை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக இருந்ததால் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைக்கவும் செய்தனர்.

இதையடுத்தே அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி அவரை கைதும் செய்தனர்.

அதேநேரம் வருமானவரித் துறையின் நுண்ணறிவு பிரிவினர் சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடர்ந்து தங்களது ரெய்டை நடத்துவதற்கான அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன.

“தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 270 அலுவலகங்கள் வருமானவரித் துறைக்கு தங்களது நிதி பரிமாற்றம் குறித்தான 61ஏ படிவ கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. தற்போது சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். மற்ற அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் புகுந்து முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நில விற்பனையில் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பிரபல கட்டுமான நிறுவனமும், சில திமுக அமைச்சர்களும் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் 30 லட்ச ரூபாய்க்கும் மேலான மதிப்பு கொண்ட நில விற்பனை தொடர்பான நிதி பரிமாற்ற ஆவண விவரங்களை வருமானவரித் துறையினர் கேட்கும்போது அதை பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை வைத்து பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகையும், பதிவு செய்யப்பட்ட தொகையும் பொருந்திப் போகிறதா? என்பதை வருமான வரி இலாகா அதிகாரிகள் சரி பார்ப்பார்கள். ஆனால் இடத்தின் மதிப்பு சந்தை வழிகாட்டி விலையை விட மிக மிக குறைவாக இருந்தால் அதன் மீது சந்தேகம் அவர்களுக்கு வந்துவிடும்.

அதேநேரம் அமைச்சர்கள், அரசியல்வாதிள், தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டோர்
தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துகளுக்கு தங்களின் உறவினர்களை பினாமிகளாக வைத்திருந்தால் அதை கண்டறிவது மிகவும் கடினம்.

இதுபோன்ற நேரங்களில் ஒரு
சில பொதுநல ஆர்வலர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அனுப்பும் தகவல்களையும், பினாமிகள் மூலம் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சட்ட விரோதமாக ஏராளமான சொத்து வாங்கி குவித்துள்ளனர் அதைப்பற்றி விசாரியுங்கள் என்று நிலத்தின் அமைவிடம், சர்வே நம்பர் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பி வைக்கும் அனாமதேய புகார் கடிதங்களையும் வருமானவரித் துறையினர் எளிதில் புறம் தள்ளி விடுவதில்லை. அவற்றையும் தங்களுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதும் உண்டு.

இதுபோல கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரும் அவருடைய மனைவி, மாமியாரும் .
வருமானவரித் துறையினரிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முதலே வருமானவரித்துறையினர், முறையாக கணக்கு காட்டாத பத்திர பதிவுகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், 2021-ம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடந்த பத்திர பதிவுகளைதான் அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நிதி பரிமாற்ற அறிக்கையை தாக்கல் செய்யாத 268 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த பத்திரப்பதிவுகளை வருமானவரித் துறையினர் முழுமையாக ஆய்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகலாம். அதனால் சந்தேகத்திற்கிடமான பத்திர பதிவு அலுவலகங்களை மட்டுமே அவர்கள் இனி தோண்டித் துருவலாம்.

அதேநேரம், நிதி பரிமாற்ற அறிக்கை தாக்கல் செய்யாத மற்ற பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டால் சுமார் 55 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை கணக்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய முடியும் என்கிறார்கள். இதன் மூலம் வருமானவரித்துறைக்கு குறைந்தபட்சம் கிடைக்கவேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் ஏப்பம் விடப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் கரூரில் மே மாதம் 26ம் தேதி, செந்தில் பாலாஜியின் நண்பர்கள் உறவினர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தச் சென்றபோது ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் திமுகவினரால் கடுமையாக தாக்கப்பட்டதை அவர்கள் மறந்துவிடவில்லை என்பதை
இந்த இரண்டு அதிரடி ரெய்டுகளும் நினைவுபடுத்துகின்றன.

இதனால் கரூர் தவிர வேறு மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி பினாமிகள் பெயரில் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி அதை பதிவு செய்திருந்தால் அவர் மீண்டும் வருமானவரித் துறை, அமலக்கத்துறையின் பிடியில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

இந்த சோதனை தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும், பினாமி பெயர்களில் இடம் வாங்கி குவித்தோருக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். இதில் சில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 25 பேர் வரை சிக்கும் வாய்ப்பும் உள்ளது. வருமான வரித்துறையினர் கிடுக்குப்பிடி போட்டால் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்துவிடும்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்த முக்கிய புள்ளிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எகிறி இருப்பதென்னவோ உண்மை!

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!