மெரினாவில் ஆளுநர் ஆர்என் ரவியை வரவேற்ற CM ஸ்டாலின் ; தேசியக்கொடியை ஏற்றிய ஆளுநர்..!!
Author: Babu Lakshmanan26 January 2023, 8:39 am
சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றினார்.
குடியரசு தின விழா ஆண்டுதோறும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறுவது வழக்கம். அந்த இடத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தார். பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை சம்பிரதாயப்படி முதலமைச்சர் .ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து, முப்படைகளின் அணிவகுப்பை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.