குற்றவாளிகளுக்கு அரசே உடந்தையாக இருந்தது அம்பலம்.. பில்கிஸ் பானு வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 12:55 pm

குற்றவாளிகளுக்கு அரசே உடந்தையாக இருந்தது அம்பலம்.. பில்கிஸ் பானு வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையில் 11 குற்றவாளிகளும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி குஜராத் அரசு பரிந்துரையின் பேரில் நன்னடத்தை மற்றும் தண்டனை குறைப்பு விதிப்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் முகஸ்டாலின் தனது சமூக வலைத்தளமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் ” சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை – நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும்.

அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 349

    0

    0