விஜய் அரசியலில் தலை தீபாவளியா? பட்டாசு வெடிக்குமா? நமத்துப் போகுமா?

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 7:58 pm

நடிகர் விஜய் கட்சி துவங்கி முதல் மாநில மாநாடு தலை தீபாவளி போல் நடக்க உள்ளது. இதில் எடுக்கும் அரசியல் பட்டாசுகள் வெடிக்குமா என்று தமிழக அரசியலே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர்.
இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், ‘நகாய்’ திட்ட இயக்குனர் வரதராஜனிடம் வழங்க கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டினை முன்னிட்டு விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு தொண்டர்களை வரவேற்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவு பெற்று மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராட்சத பலூன்களில் விஜயின் உருவம் அச்சிடப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது .மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இந்த பலூன் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட்டவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தாம்பூலத்துடன் மாநாட்டிற்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பூ பழம், வெற்றிலை, பாக்கு அடங்கிய தாம்பூலத்துடன் வீடு வீடாக சென்று கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். தவெக மாநாட்டில் விஜய் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி என்ன என்பது அனைவருக்கும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

170 அடி நீளத்திற்கு மாநாட்டு மேடை – பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மாநாட்டிற்கு ரசிகர்களையும் பொது மக்களையும் திரட்டும் வகையில் வீடு வீடாக சென்று மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தும் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அடுத்த சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகியான கபாலி தலைமையில் சின்ன கோட்டகுப்பம் பச்சைவாழி அம்மன் கோவிலில் மாநாடு சிறப்புற நடைபெற சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது .
மேலும் 108 தேங்காயும் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்துபூ, பழம் வெற்றிலை, பாக்குடன் மாநாடு அழைப்பிதழ் வைத்து வீடு வீடாக சென்று தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று வீடு வீடாக சென்று அழைப்பிதழ்களையும் வழங்கினார்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த அழைப்பிதழ்களை அவர் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாலையில் செல்வர்களிடமும் வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழையும் கொடுத்து மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் சின்ன கோட்டகுப்பம் பகுதிசேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடக்கும் இடம் முழுவதும் கோட்டை சுவர் போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு முகப்பு தோற்றம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இரு கால்களை தூக்கி பிளிறும் யானைகளின் உருவங்கள் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு மேல் விஜய்யின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு பந்தலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 30 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கும் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
600க்கும் மேற்பட்ட கம்பங்களில் பறக்கும் தவெக கொடி கம்பீரமாக உள்ளது.
மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் 15,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகிறது.
மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளன.

விஜய் செல்வதற்காக சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பிரத்யேகமாக சிறப்பு சாலை அமைக்கப்படுகிறது. விஜய் செல்லும் சிறப்பு சாலையில் யாரும் நுழைந்து விடாமல் தடுக்க 10 அடியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தவெக மாநாட்டில் விஜய் பொதுச்செயலாளர் புசில்ஆனந்துக்கு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்கைத் தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் வரலாற்று ஆளுமைகள் சேரன், சோழன், பாண்டியன், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கும் கட் அவுட்டுகள் வைக்கப்பட உள்ளன.

மேலும் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. விஜயின் வித்தியாசமான மாநாடு இது கருதப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சி கள் நடத்திய மாநாட்டை விட பிரம்மாண்டமாக இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர், அறிவுச்சுடர் அம்பேத்கருக்கு கட்அவுட் வைக்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுகவை துவக்கிய அண்ணாதுரை அதிமுகவை துவக்கிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோருக்கு எந்தக் கட்அவுட்டும் வைக்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது : விஜயின் அரசியல் தலை தீபாவளியாகவே இந்த மாநாடு அமைந்துள்ளது. இதில் அவர் சொல்லப் போகும் லிட்டில் ஸ்டோரி தான் ஹைலைட்டாக இருக்கப் போகிறது.

ஆட்சியில் ஊழலுக்கு மதுக்கடைகளை திறக்காமல் கல்விக்கூடங்களை திறந்து தமிழனை படிக்க வைத்தவர் கர்மவீரர் காமராஜர், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் உயர வேண்டும் என்று நினைத்து போராடியவர் பெரியார், வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடி இந்திய அரசியல் சாசனத்தை எழுதியவர் அம்பேத்கார் ஆகியோருக்கு மட்டும் கட்அவுட்டு வைத்து விஜய் பெருமை சேர்த்திருக்கிறார். அதே நேரத்தில் திமுக ,அதிமுக ஆகிய கட்சிகளால் நாட்டில் ஊழல், மதுக்கடைகள் பெருகி உள்ளது.

இதனால் ஊழலற்ற நல்ல நிர்வாகத்தை ஏழை,எளிய மக்களுக்கு தர திட்டமிட்டு இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிகிறது. இருந்தாலும் தொண்டு செய்து பழுத்த பழம்.. தூய தாடி மார்பில் விழும்… மனக்குகையில் சிறுத்தை எழும் என்று கூறப்படும் பெரியாரை திராவிட கட்சிகள் தூக்கிப் பிடிக்கும் போது, அவருக்கு விஜய் கட்அவுட் வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடவுள் இல்லை என்று சொல்வது மட்டுமல்லாமல். குறிப்பிட்ட ஜாதியினரை பார்த்தால் பாம்பை அடிப்பதைவிட முதலில் அவரை அடிக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். அவர் வழியில் இவர் செல்லப் போகிறாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இல்லை இந்த கட்சி பாஜாவுக்கு எதிரானதா.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய் கட்சி இருக்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சேர ,சோழ, பாண்டியர்களுக்கும் கட்அவுட் வைத்து பழங்கால தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக மாநாட்டு பந்தல் அமைந்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒரு ஒரு நிகழ்வாக தமிழ் அண்ணைக்கும் கட்அவுட் வைத்துள்ளார். நான் ஒரு தடவை முடிவெடுத்து விட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று சொன்ன விஜய், மாநாட்டில் என்ன பேசப் போகிறார் என்பது அரசியல் நோக்கர்களின் ஆர்வமாக உள்ளது. அவர் பேச்சு அவரே கேட்காமல் இருக்கும் போது. தொண்டர்கள் எப்படி கேட்பார்கள் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து விஜயின் அரசியல் மாநாடு ஒரு தீபாவளி போல அரசியல் வானில் ஜொலிக்க உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் பட்டாசுகள் போல வெடிக்குமா, இல்லை நமத்து போகுமா என்பது மாநாட்டில் எடுக்கும் முடிவை பொருத்தது. அரசியலில் குழந்தையாய் அடியெடுத்து வைக்கும் விஜயின் மாநாடு அரசியலில் பேசும் மாநாடாக மாறுமா… இல்லை பூசும் மாநாடாக போகுமா என்பது மாநாட்டு முடிவில் தான் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 193

    0

    0