ரூ.1000, காலை சிற்றுண்டிக்கு புதிய சிக்கல்?… நழுவும் ரேஷன் ஊழியர்கள், ஆசிரியர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2023, 7:17 pm
திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்த அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டமும், செப்டம்பர்
15ம் தேதி முதல் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டமும் பல்வேறு வழிகளில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
உரிமைத்தொகை வாய்ப்பே இல்லை
ஏனென்றால் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி பயன் கிடைக்கும் என்று கூறப்படுவதும், ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க நிர்ணயத்துள்ள இலக்கு குறித்தும் பிரமாண்டமாக காட்டப்பட்டாலும் அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது பளிச்சென்று தெரிகிறது.
அரசு எந்தவொரு நலத் திட்டத்தை தொடங்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுவது இயல்பான ஒன்றுதான், ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த வாதம் இதில் முற்றிலுமாக அடிபட்டுப் போய்விடும் என்கிறார்கள்.
ஏனென்றால் உரிமைத்தொகை பெற மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத் தொகையை பெறுவதற்கு பல்வேறு கிடுக்குப் பிடி நிபந்தனைகளை திமுக அரசு விதித்திருப்பதால் 57 லட்சம் குடும்பத் தலைவிகள் இதற்கு விண்ணப்பிக்கவே இல்லை. தவிர ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டு இருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
இதனால் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் 63 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இந்த நிலையில் ஆன்-லைன் முறையில் பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களை அரசு உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்தபோது போதிய தகவல்கள் இல்லாதவை, தனியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நேரில் கள ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளை கண்டறிந்து உறுதிப்படுத்த, மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் உள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 100 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. இது குறித்து வீடு வீடாகச் சென்று கள ஆய்வு நடத்த ரேஷன் கடை ஊழியர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மூன்று தரப்பினர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் என்னென்ன ஆய்வு செய்ய வேண்டும், குடும்ப அட்டைதாரரிடம் எந்தெந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்கிற படிவமும் வழங்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக விண்ணப்பதாரர் மத்திய – மாநில அரசு ஊழியரா, இல்லையா? ஓய்வூதியம் பெறுபவரா, வருமான வரி, தொழில் வரி செலுத்துபவராக இருக்கிறாரா, ஜி.எஸ்.டி., செலுத்துபவரா? ஊராட்சி தலைவர், உறுப்பினர் மற்றும் கவுன்சிலர்களாக இருக்கிறார்களா என பல்வேறு தகவல்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது
இது தொடர்பான விவரங்களை ரேஷன் கடை ஊழியர்கள் ஓரளவுக்கு திரட்டி விடுவார்கள். ஆனால் அவர்களால் எளிதில் தகவல் பெற முடியாத அளவிற்கு இன்னும் சில கறார் கேள்விகளும் இருக்கின்றன.
நழுவி ஓட்டம் பிடிக்கும் ரேஷன் ஊழியர்கள்
ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் உள்ளிட்ட பிற ஓய்வூதியம் பெறுபவரா, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார்களா, அவர்கள் செய்யும் வேலை என்ன?மாத வருமானம் எவ்வளவு, நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறார்களா; அவ்வாறு இருந்தால், வாகன உரிமையாளர் பெயர், அதன் ரகம், பதிவு எண், நிலம் வைத்திருக்கிறார்களா, குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ‘கிரெடிட் கார்டு’ வைத்திருக்கிறார்களா? என்னும் கேள்விகளையும் எழுப்பி படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் வீடு வீடாகச் சென்று, குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பான சுய விவரங்களை சேகரிக்க ரேஷன் கடை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல உண்டு.
“முக்கிய தகவல்களை கேட்டு பெறுவது சிரமமான காரியம் என்றாலும் கூட அதை எங்களால் ஓரளவு செய்துவிட முடியும். ஆனால் உரிமைத் தொகை பெற தகுதி உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் துல்லியமாக கண்டறிவதில்தான் சிக்கலே வரும். இந்தப் பணியை யார் மேற்கொண்டாலும் அவர்களால் 55 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே உண்மை நிலவரத்தை அறிய முடியும். அதேநேரம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்தியபோது அங்கு ஏராளமான பெண்களை திமுக இளைஞர் அணியினர் ஆர்வத்துடன் அழைத்து வந்தனர். ஆனால் இப்போது நாங்கள் கள ஆய்வு செய்வதற்கு அதேபோல ஒத்துழைப்பை தர அவர்கள் மறுக்கிறார்கள்.
தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ?
தகுதியுள்ள குடும்பத்தலைவிகள் யாருடைய பெயராவது விடுபட்டு போனால் தேர்தலில் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது. ஏனென்றால் இது நீண்ட காலத்திட்டமாக இருப்பதால் ஒரு கோடி பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்காமல் போய் எதிர் வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
அதேநேரம் நாங்கள் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்த அட்டைதாரரின் விண்ணப்பம், தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாங்கள் ஆய்வு செய்து, சமர்ப்பித்த படிவத்தால் நிராகரிக்கப்பட்டதாக, எங்கள் மீது குடும்ப அட்டைதாரர்கள் குற்றம் சுமத்துவார்கள்.
இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தீராத பழிதான் வந்து சேரும். வாழ்நாள் முழுவதும் எங்களை திட்டிக் கொண்டே இருப்பார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பெண்கள் மத்தியில் கொந்தளிப்பும் ஏற்படும். அதை அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் புரிந்து கொண்டதுபோல தெரியவில்லை. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் எங்களுக்கு இது போன்ற நெருக்கடியே ஏற்பட்டிருக்காது. அதனால்தான் கள ஆய்வு பணியில் எங்களை விட்டு விடுங்கள் என கூறுகிறோம்” என்று அவர்கள் மறுப்பதாக தெரிகிறது.
ரேஷன் கடை ஊழியர்களின் மனக்குமுறல் இப்படி என்றால், அரசு பள்ளி ஆசிரியர்களின் வேதனையோ வேறு மாதிரியாக உள்ளது. அவர்கள் கூறுவது இதுதான்.
குமுறும் அரசு பள்ளி ஆசிரியர்கள்
“காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7 மணிக்குள் பள்ளிக்கு வந்து விட வேண்டும் என சுற்றறிக்கையாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும், மாணவர்களின் நலத் திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் அளித்தல் என பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்கவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இதுபோன்ற சூழலில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் 7 மணிக்கே பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். எனவே காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். இந்த பணியில் இருந்து எங்களை விடுவிக்கவேண்டும்’’ என்கின்றனர்.
காலை சிற்றுண்டி திட்டத்துக்கு சிக்கல்?
“என்னதான் கூர்ந்து கவனித்து காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணித்தாலும்
அதை தயாரிப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை யாரும் திருடிச்சென்று விடாமல் பாதுகாத்தல், பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அன்றாட இருப்பு நிலவரம் போன்ற மிகப் பெரிய பொறுப்புகள் ஆசிரியர்களின் தலையில்தான் விழும். தவிர இதற்காக அவர்கள் வீட்டில் இருந்து காலை 6 மணிக்குள் கிளம்ப வேண்டிய நெருக்கடியும் ஏற்படும். மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்ப ஐந்து மணி ஆகிவிடும். வெளியூரிலிருந்து பணிக்கு வருபவர்கள் என்றால் அவர்களது பாடு இன்னும் திண்டாட்டம்தான்.
அது மட்டுமல்ல சிற்றுண்டி தரமாக தயாரிக்கப்படுகிறதா? என்பதை சரி பார்ப்பதும் அவர்களிடமே வந்து சேரும். தரமற்ற சிற்றுண்டி காரணமாக மாணவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டால் அது கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகும்.
தேர்தல் நேரத்தில் அதை எதிர்க்கட்சிகள் தங்களின் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தினால் ஆளும் கட்சியினரிடம் இருந்து அழுத்தமும் தங்கள் மீது வைக்கப்படும் என்பதையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே அறிவார்கள். அதனால் தேவையின்றி தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை விரும்பாமல்தான் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்க கூடாது என்ற கோரிக்கையை அவர்கள் விடுக்கின்றனர்” என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்!
ரேஷன் கடை ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த நழுவல் ஓட்டத்தை தடுக்க திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
0
0