ரூ.1000 விண்ணப்பம் வீடு தேடி வருமா?…உரிமைத்தொகை கிளப்பும் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2023, 8:00 pm

திமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மீது ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதையும் மிஞ்சும் அளவிற்கு இதற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக வினியோகிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

விண்ணப்ப படிவம் வெளியானது

ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ஆதார் எண், ரேஷன் அட்டை நம்பர், திருமணம் ஆனவரா, இல்லையா, தொலைபேசி எண் வாடகை வீடா? சொந்த வீடா?… மின் இணைப்பு எண், வங்கி கணக்கு எண், வங்கி மற்றும் கிளை பெயர், குடும்பத்தினரின் தொழில், மாத வருமானம், வரி செலுத்தும் நிலை மற்றும் குடும்ப சொத்துகள் போன்றவை பற்றி விளக்கமாக தகவல் கேட்கப்பட்டுள்ளது.

இதுதவிர விண்ணப்பதாரர் தமிழக அரசுக்கு 11 உறுதிமொழிகளையும் கட்டாயம் அளிக்கவேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு முகாம் நடத்தி 1.5 கோடி விண்ணப்பம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு கோடி பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான நிபந்தனைகளும், உறுதிமொழிகளும் தலையை சுற்ற வைக்கும் விதமாக இருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பது போல் ஒரு கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்குமா? என்ற கேள்வி தானாகவே எழுகிறது.

பரிதவிக்கும் குடும்பத் தலைவிகள்

அதேநேரம் இந்த விண்ணப்பங்களை நகர்ப்புறங்களில் சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும், கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று வழங்கி குடும்பத் தலைவிகளிடம் அதைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் பூர்த்தி செய்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பணிகளுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த போவதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் விளிம்பு நிலை குடும்பத் தலைவிகளை மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

தரமற்ற பொங்கல் பரிசு

ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, முதலாம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 21 மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அதில் வழங்கப்பட்ட பச்சரிசி, வெல்லம் போன்ற பல பொருட்கள் தரமற்றவையாக இருந்தன. இதனால் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டின.

இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் இதற்கான டோக்கன்களை, ரேஷன் கடைகளில் வழங்கினால் மக்கள் கூட்டம் அலைமோதும், நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டிய நிலையும் ஏற்படும் என்பதால் டோக்கன்களை தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக கொண்டு சேர்க்கும் பணி நடந்தது.

தன்னார்வலர்களா? திமுகவினரா?

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் டோக்கன்களை வினியோகித்தவர்களில் 85 சதவீதம் பேர் திமுகவின் இளைஞரணியை சேர்ந்தவர்கள் என்பதுதான். இப்படி டோக்கன்களை வழங்கியபோது அதற்காக நூறு ரூபாய் வரை தன்னார்வலர்கள் கமிஷன் பெற்றுக் கொண்ட நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேநேரம் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது திமுக அரசின் தொலைநோக்கு திட்டம் என்று கூறப்படுவதால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குடும்பத் தலைவிகளிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படும். அவர்கள் தகுதியானவர்களை கண்டறிந்து உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பார்கள் என்றும் தெரிகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 55 லட்சம் பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் பெரும்பாலான மகளிர் சுய உதவிக் குழுவினர் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். தற்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் இதைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம்.

தவிர அவர்களே கூட குடும்பத் தலைவிகளின் தகுதியை ஆய்வு செய்து ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்குரியவர்களை தேர்வு செய்யும் நிலையும் உருவாகலாம். அவர்களும் தங்கள் பகுதியில் உள்ள திமுகவினரின் குடும்பத் தலைவிகளை சேர்த்து விடுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

எனினும் தங்கள் மீது சந்தேகம், எதுவும் எழாமல் இருக்க பெயரளவிற்கு கஷ்டப்படும்
சில குடும்பத் தலைவிகளை இத்திட்டத்தில் இணைத்து விடுவார்கள் என்ற அச்சம் சமூக நல ஆர்வலர்களிடமும் அரசியல் கட்சியினரிடமும் எழுந்துள்ளது.

ரூ.1000 தமிழக மக்களுக்கு அல்ல

இதன் காரணமாகத்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழக மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது” என்று திமுக அரசை கடுமையாக சாடி இருக்கிறார்.

ஜெயக்குமார் ஆவேசம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “இரண்டு கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளது. இத்தொகை பெற தகுதியுடையவர்களை சமூக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுக்கப் படவிருப்பதால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக அது மாறப்போகிறது” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

பெண்களின் பெரிய ஆயுதம் கண்ணீரும், மௌனமும்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ,
“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது பெண்களை ஏமாற்றம் செயல். ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகை கிடையாது என்பது நூற்றுக்கு 99 பேருக்கு இந்தத் தொகை சென்றடையாது என்பதைத்தான் காட்டுகிறது. சொன்னதை செய்ய மாட்டோம் என்பது போல்தான் திமுக அரசு நடந்து கொள்கிறது. பெண்களின் பெரிய ஆயுதம் கண்ணீரும், மௌனமும் தான். அது 2024ம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்” என்று கொந்தளித்து இருக்கிறார்.

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதியை தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகே திமுக அரசு நிறைவேற்றுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 28 ஆயிரம் ரூபாய் நிலுவைத் தொகையை இனி ஒரு போதும் பெற முடியாது என்பது எதார்த்தமான உண்மை என்றாலும் கூட வந்தவரைக்கும் லாபம் என்ற நிலைக்கு போதிய வருவாய் இன்றி தடுமாறும் குடும்பத் தலைவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டபோது அளித்த வாக்குறுதிக்கும் தற்போது நிறைவேற்ற இருக்கும் உரிமைத் தொகை திட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது” என்று சமூக
நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

1 கோடி பேரை புறக்கணிக்கும் திமுக

“ஏனென்றால் திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளுக்கு பின்பு பத்தாண்டு கால தொலைநோக்கு திட்டத்திற்கான வாக்குறுதிகள், ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்ற தலைப்பில் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை தொடர்பாகவும் ஏழு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

அதில் சமூக நீதி என்ற தலைப்பின் கீழ் ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம்’
என்று தெள்ளத்தெளிவாக கூறியிருந்தது. ஆனால் நடைமுறைக்கு கொண்டு வரும்போது குடும்பத் தலைவிகளுக்கு தகுதியை நிர்ணயம் செய்து சுமார் ஒரு கோடிப்பேரை திமுக அரசு புறக்கணிக்கிறது.

இதில் மட்டுமல்ல மாநகர அரசு உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண வாக்குறுதியையும் சொன்னதுபோல திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதும் கண்கூடு.

சமூக நல ஆர்வலர்கள் பீதி

ஏனென்றால் 501-வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ளூர் நகரப் பேருந்துகளில் மகளிர்க்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதனால் அனைத்து மாநகர பஸ்களிலும் இலவசப் பயணம் செய்யலாம் என்ற கவர்ச்சிகர வாக்குறுதியாகவும் இது பார்க்கப்பட்டது. குறிப்பாக மாநகரங்களில் ஓடும் விரைவு பேருந்துகளிலும் இலவச பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நகர்ப்புற பெண்கள் இருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் மாநகர சாதாரண பேருந்துகளில் மட்டுமே கட்டணம் இல்லாமல் மகளிர் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உறுதியாக கிடைக்கும் என்பதால் தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினரில் சிலர் வசதியாக உள்ள குடும்பத் தலைவிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுடைய பெயரையும் உரிமைத்தொகை பெறுவோர் பட்டியலுக்குள் கொண்டு வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் பீதியை கிளப்புகிறார்கள்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!