திமுக ஆட்சியில் மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரிப்பு… புகார் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசார் : ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan4 February 2022, 8:05 pm
சென்னை : தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுவது அதிகரித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன் மற்றும் சென்னை மாவட்ட இந்து முன்னணி தலைவர் இளங்கோவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது :- கடந்த ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, திம்மையம்பட்டி கிராமத்தில் 2 பெண்கள் கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதனை இந்து முன்னணியைச் சேர்ந்த கணேஷ் பாபு அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தட்டிக்கேட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல், மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கொடுத்த புகாரை ஏற்று கணேஷ் பாபு மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
அதேபோல, குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி மதப்பிரச்சாரம் நடத்தக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதுரை தெற்கு வாசலில் ஒரு இடத்தை கிறிஸ்தவ அமைப்பு வாடகைக்கு எடுத்து, அங்கு மதப்பிரச்சாரம் மற்றும் மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டனர். அதனை எதிர்த்து பா.ஜ.க நிர்வாகி ராசா கண்ணு உள்ளிட்ட 6 பேர் கேள்வி கேட்டதுடன்,
காவல் துறைக்கு வாய்மொழியாகவும், எழுத்து வாயிலாகவும் புகார் அளித்தனர். அதனை கருத்தில் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட கிறிஸ்த்துவ அமைப்பு கொடுத்த புகாரை ஏற்று, ராசா கண்ணு உள்ளிட்ட 6 பேரை பொய் வழக்குகளில் காவல்துறை கைது செய்துள்ளனர்.
மேலும், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மதமாற்ற பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது. அதனை கேள்வி கேட்கும் இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகின்றனர். இந்நிலையில் பொய் வழக்குப் போடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து மனு அளித்துள்ளோம். இவ்விவகாரம் தொடர்பாக பேச தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரை சந்திக்க மின்னஞ்சல் மூலம் நேரம் கேட்டுள்ளோம், எனக் கூறினர்.
இந்த சந்திப்பின்போது உடனிருந்த மதுரையில் கைது செய்யப்பட்ட ராசா கண்ணுவின் சகோதரி சித்ரா, தனது சகோதரரை நள்ளிரவில் கேள்வி கேட்காமல் காவல்துறை இழுத்துச் சென்றதாகவும், மதமாற்றத்தை எதிர்த்து தட்டிக்கேட்டதை குற்றமாக்கி தனது சகோதரர் மீது காவல்துறை பொய் வழக்குகள் பதிந்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன், கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை என்று கூறியதை தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக தெரிவித்தபோது, செய்தியாளர்கள் ஜார்ஜ் பொன்னையா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது பற்றி உங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியதால் அந்த விவாதத்தை விட்டுவிட்டு அவர் மீண்டும் மதமாற்ற சர்ச்சையைப் பற்றி பேசத் துவங்கியது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.