மார்ச் 5ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ; அனுமதி கொடுக்காவிட்டால்… தமிழக டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்..!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 9:57 pm

வரும் மார்ச் 5ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 10ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். மனு கொடுத்தும் முதல் இரண்டு தேதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. மார்ச் 5ஆம் தேதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

எனவே, அந்த நாளில் அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி காவல்துறை டிஜிபிக்கு இன்று ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கும்படியும், அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!