நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி : உத்தரவை மீறி தடுத்து நிறுத்தினால்… தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!!
Author: Babu Lakshmanan30 September 2022, 4:58 pm
தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
விஜயதசமி மற்றும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2ம் தேதி, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. மேலும், இந்த பேரணி தொடர்பாக செப்டம்பர் 28ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதேவேளையில், மத நல்லிக்கணத்தை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது என்றும், இந்த ஊர்வலத்துக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது. இதனிடையே, பிஎஃப்ஐ-க்கு விதிக்கப்பட்ட தடையினால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் இயக்க அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போட்டியாக, அக்டோபர் 2-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்திருந்த சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனிடையே, திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று கூறிய நீதிபதிகள், நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அன்றைய தினம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி மறுத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.