களைகட்டிய தீபாவளி.. களையிழந்த முகத்துடன் வியாபாரிகள்.. கூட்டம் கூட்டமாக வந்து என்ன இலாபம்..?
Author: Babu Lakshmanan22 October 2022, 8:16 pm
தீபாவளி பண்டிகை களைகட்டிய நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும், விற்பனையில் திருப்தி இல்லை என்கின்றனர் சாலையோர வியாபாரிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தாலுகாக்கள் உள்ளன. சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயத் தொழில் கொண்ட மாவட்டம் ஆகும். மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லாத மாவட்டமாகும்.
இந்நிலையில், தற்போது வரும் 24ஆம் தேதி இந்திய முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சாலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்களுக்கான சட்டை, பேண்ட் மற்றும் பெண்களுக்கான சுடிதார், சேலை உள்ளிட்ட துணிகளும், அதேபோல் வீட்டுக்கு தேவையான பாய், தலைகாணி, மெத்தை, போர்வை, கம்பளி, தூண்டு, சேர், கட்டில் போன்ற அனைத்து வகை பொருள்களும், சாலையோர வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ஒரு நாளே உள்ளதால் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டம் அதிக அளவில் உள்ளது. மாலை நேரம் மேலும் கூட்டம் அதிக அளவு இருக்கும். எனவே, துணை காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி விற்பனை குறித்து வியாபாரி அபுதாகீர் கூறும் பொழுது;- கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலகட்டம் இருந்து வந்த சூழ்நிலையில், தற்போது கடன் வாங்கி கடைகள் அமைத்துள்ளோம். ஆனால், பொதுமக்கள் அதிகளவு வருகின்றனர். விற்பனையானது மந்தமாக உள்ளது. பொதுமக்கள் கையில் பணம் புழங்க வில்லை. இதனால், விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு இந்த வருட தீபாவளி இழப்பை ஏற்படுத்தும், என்று கூறினார்.
மேலும் பொதுமக்கள் கூறும் பொழுது:- கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தற்போது தீபாவளியை சந்திக்கிறோம். அதிக அளவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில வருடங்களை விட தற்போது அனைத்து பொருட்களும் விலை உயர்வு அடைந்துள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து வித பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது, என்று கூறினார்.