சனாதன விவகாரம்.. அமைச்சர் உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் ; காங்கிரஸ் திடீர் வாய்ஸ்.. இண்டியா கூட்டணி ஷாக்!!
Author: Babu Lakshmanan20 April 2024, 12:08 pm
சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பது இண்டியா கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட கழகம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார்… காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரால் TVK-வினர் ஷாக்..!
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்து தான் ஆக வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்,” என்று பேசினார்.
அவரது இந்தப் பேச்சு தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த விவகாரம், திமுகவுக்கு மட்டுமல்லாது, அதனுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரசுக்கும் பெரும் சிக்கலையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமைச்சர் உதயநிதியின் இந்தக் கருத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது, அது அவருடைய சிந்தனை என்றும், சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலங்கானா மாநில முதலமைச்சர் கூறிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.