பாஜக சார்பாக களமிறங்கும் சரத்குமார்? நெல்லை தொகுதியில் போட்டி : கொட்டும் மழையில் வெளியான அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2023, 8:12 pm
பாஜக சார்பாக களமிறங்கும் சரத்குமார்? நெல்லை தொகுதியில் போட்டி : கொட்டும் மழையில் வெளியான அறிவிப்பு!!
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தினார். இருப்பினும் அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணியை சரத்குமார் தொடங்கி உள்ளார். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் நடிகர் சரத்குமார் பங்கேற்று பொறுப்பாளர்களை அறிமுகம் செய்தார். அதோடு அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து இன்று சரத்குமார் திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சரத்குமார் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். பத்திரிகையாளர் ஒருவர், சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தல்களில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகர் சரத்குமார், ‛‛நேற்றே நான் எனது கருத்துகளை பரிமாறினேன். அடுத்ததாக உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்” என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛பாஜகவுக் ஆதரவாக பேசுகிறீர்களே? அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு, சரத்குமார், ‛‛பாரத பிரதமர் மோடியின் பெயர் மற்றும் இந்தியர்களின் பெருமை எப்படி உயர்ந்திருக்கிறது? என்பது பற்றி சுட்டிக்காட்டி இருக்கிறேன். பாஜக உடன் இணைய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும்.
பிரதமரை ஒரு நாட்டின் தலைவர் என்று பார்க்க வேண்டும். அவர் ஒரு கட்சியை சார்ந்தவர் என நினைக்காமல் அவர் நம்பெயரை எப்படி உயர்த்தியிருக்கிறார் என்பதை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அழுத்தமாக கூறியிருக்கிறேன்” என்றார்.
அடுத்ததாக, ‛‛தென் மாவட்டங்களில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு உள்ளதா? ” என்ற கேள்விக்கு இருக்கலாம்” என்று சரத்குமார் பதிலளித்தார். அதோடு திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‛‛இருக்கலாம்” என்றார்.
இதன்மூலம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா? சரத்குமார் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.