பாலியல் புகார் அளித்த சரிதா நாயர்… முதலமைச்சர் வீட்டில் உடனே ரெய்டு… முக்கிய புள்ளிகள் சிக்குகின்றனரா…?
Author: Babu Lakshmanan4 May 2022, 5:47 pm
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த சோலார் பேனல் முறைகேடு சம்பவம் கேரளாவையே உலுக்கியது. பல கோடிகளை அப்போதைய ஆளும் கட்சியினர் சுருட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்க தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும், அவரது காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஊழலில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு மத்தியில் முதலமைச்சர் உம்மன்சாண்டி உள்பட அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட 6 பேர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகார் அளித்தது கேரளாவில் பெரும் புயலை கிளப்பியது.
குறிப்பாக முதலமைச்சராக இருந்த போது, உம்மன்சாண்டிக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கேரளாவை ஆண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த நாளில் உம்மன்சாண்டி வீட்டில் இல்லை என்று கூறி வழக்கை போலீசார் முடித்து வைத்தனர்.
ஆனால், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி, முதல்வர் பினராயி விஜயனிடம் சரிதாநாயர் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், உம்மன் சாண்டி முதலமைச்சராக இருந்த போது தங்கியிருந்த அரசு வீட்டில் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் வசித்து வருகிறார். சரிதா நாயர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் நேற்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சரிதா நாயரும் உடன் வந்திருந்தார். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி சிக்கியிருந்தால், பல முக்கிய அரசியல் புள்ளிகள் வசமாக சிக்குவார்கள் என்று தெரிகிறது.
சிபிஐ சோதனை நடத்திய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.