ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்ய நாள் குறித்தோம்.. அவரே நர்சுகளுக்கு GIFT ஆர்டர் போட்டார் ; சசிகலா சொன்ன புது ரகசியம்!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 2:06 pm

சென்னை ; தனக்கு பிறகு யாரை தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும் என்றும், அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தபோதுதான் திடீரென இறந்துவிட்டதாக வி.கே. சசிகலா தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் வி.கே. சசிகலா பங்கேற்று ஆதரவற்றோருக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களையும், மதிய உணவாக மட்டன் பிரியாணியையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- அதிமுகவினர் அனைவரையும் நான் ஒன்றிணைப்பேன் என இப்போதும் சொல்கிறேன். பழனிசாமி , பன்னீர்செல்வம்தான் தனித்தனியாக செயல்படுகின்றனர். நான் அப்படியல்ல. பெங்களூரில் இருந்து வெளிவந்த போது கூறியதையே இப்போதும் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை பெறுவோம்.

தனியாக இருப்பதால் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசிக் கொள்கின்றனர். ஒரு தாய் போல அனைவருக்கும் பொதுவான ஆளாக நான் இருக்கிறேன். அதிமுக தொண்டர்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை. அனைவருக்கும் திருமண விழா வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றேன்.

கட்சியில் தொண்டர்கள் எடுக்கும் முடிவே நிரந்தரமானது. எனக்கு என தனியாக ஆள் இல்லை, எல்லா மாவட்டம், எல்லா இனத்தவறும் எனக்கு ஒருதாய் மக்கள்தான். நான் இருக்கும் வரை அதிமுக தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

திமுகவிடம் விவசாயிகளுக்கான நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை அறிக்கைகள் கூட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தனக்கு பிறகு தலைமைப் பொறுப்பில் யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும். அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில்தான் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டார். பெங்களூருக்கு சிறை செல்லும் முன்பு அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

எல்லோர் மனதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் எந்த உயரம் சென்றாலும் என் பாதத்தை பார்த்தே நடப்பேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் வந்தோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ விளக்கம் தருமாறு கூறினர். ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து கேள்விக்கும் எழுத்து வடிவிலும் சரியான பதிலை கொடுத்தேன். காரணம் ஜெயலிலிதா மரணம் குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன்.

நானும், ஜெயலலிதாவும் பெண்ணாக இருந்தாலும் பெண் சிங்கமாக இருந்தோம் . கருணாநிதி தந்த தொந்தரவுகளை தாண்டி சாதித்தோம். முதுகிற்கு பின்னால் பேசுபவர்கள் நாங்கள் இருவரும் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ தனியார் மருத்துவர்கள், தமிழ்நாடு அரசின் மருத்துவர்கள் என்று மூன்று தரப்பினர் நாள்தோறும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை தந்தனர். அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை.

சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என வெளிநாட்டு மருத்துவர்கள் கேட்டபோது, அதை வேண்டாம் என்று ஜெயலலிதா மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும், சிகிச்சையின்போது தனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார்.

இறக்கும் அன்று மாலையில் கூட அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்களுடன் நன்றாக பேசுவார். டிசம்பர் 19ம் தேதி ஜெயலலிதாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று இருந்தோம். டிசம்பர் 15ம் தேதி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினர். செவிலியர்களுக்கு கொடுக்க வளையல் உள்ளிட்டவற்றையெல்லாம் ஜெயலலிதாவே தேர்வு செய்து வைத்திருந்தார். டிசம்பர் 15ம் தேதி அவற்றை ஒப்படைக்குமாறு ஆர்டர் கொடுத்திருந்த நகைக்கடை நிறுவனத்திடம் சொன்னார்.

தீபா உட்பட யாரையும் நான் திட்டியதில்லை. அறிவுரைதான் கூறுவேன். நேரடி அரசியலில் நான் இல்லாவிட்டாலும் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசித்து இருக்கின்றேன்.

1982 ல் ஜெயலிலிதாவை நான் சந்தித்தது முதல் ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பெண்கள் வெளிவருவது மிகவும் கஷ்டமாக இருந்த அந்த சூழலில்தான் ஜெயலலிதாவுடன் வந்தேன். கூட்டணி குறித்து கட்சி அமைப்புகளில் உள்ள அனைவரிடமும் கலந்தாலோசித்து யோசித்து அவர்களின் பெரிவாரியான முடிவின்படி தீர்மானிக்க வேண்டும்.

யாரும் யாரையும் விழுங்க முடியாது. பாஜக அதிமுகவை விழுங்கும் என்பது தவறு. நல்ல மருத்துவர்கள் இருந்தால் நோயாளியை (கட்சியை) காப்பாற்றி விட முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒருங்கிணைப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நல்ல வெற்றியை பெறுவோம், யாருக்காகவும் நான் பயந்து ஓடி ஒளிய மாட்டேன்.

ஒரு வீட்டில் பத்து குழந்தைகள் இருந்தாலும் தாய் ஒருவர்தான் . ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5 தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் அவர் இறந்த தேதி வேறு என்று கூறி வருகின்றனர், என்று கூறினர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 392

    0

    0