சசிகலா, டிடிவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜி எம்எல்ஏ : தட்டித்தூக்கிய எடப்பாடியார்.. உற்சாகத்தில் அதிமுக!!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2023, 3:29 pm
கடந்த 2001-2006 காலகட்டத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.கே.உமாதேவன். சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராகவும் பணியாற்றினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர், டிடிவி தினகரன் அமமுகவை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார் கே.கே.உமாதேவன்.
அமமுகவில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மதுரை மண்டல பொறுப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தார். டிடிவி தினகரனின் தென் மண்டல தளபதிகளில் ஒருவராக விளங்கினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதி அமமுக வேட்பாளராகவும் களமிறங்கினார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து கே.கே.உமாதேவன் திடீரென விலகினார். டிடிவி தினகரன் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகினார் கே.கே.உமாதேவன்.
தொடர்ந்து, சசிகலாவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். சசிகலா தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் பணியாற்றியவர்களில் முக்கியமானவர் கே.கே.உமாதேவன்.
இந்நிலையில், அவர் இன்று திடீரென அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், திருப்பத்தூர் அருகே நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற நிலையில், அடுத்த நாளே அவரைச் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் திருப்பத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான கே.கே.உமாதேவன். இது சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளருமான கோமல் ஆர்.கே.அன்பரனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அமமுக நிர்வாகிகளும் இணைந்துள்ளது ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.