‘சிறையில் இருக்கும் என் மகனை காப்பாற்றுங்க… எல்லாமே திட்டமிட்ட சதி’ : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் எழுதிய பரபரப்பு கடிதம்..!!
Author: Babu Lakshmanan1 October 2022, 4:28 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறையில் இருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, அவரை சந்திக்க பார்வையாளர்கள் அதிகளவில் வருவதால், தற்காலிகமாக சவுக்கு சங்கரை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. சிறை நிர்வாகத்தின் இந்த உத்தரவை கண்டித்து சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது மகன் சிறையில் பழிவாங்கப்படுவதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் என்று சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் எனது மகன் சங்கர் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை செய்திகளின் வாயிலாக அறிந்து கொண்டேன். மதுரை சிறையில் சங்கரை வைப்பதாக நீதிமன்ற தீர்ப்பு கூறியிருந்த போதிலும், இரவோடு இரவாக சங்கரை கடலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பாக எனக்கோ அல்லது என் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் இந்நாள் வரை தெரிவிக்கப்படவில்லை.
சவுக்கு சங்கர் சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும். தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்நாள் வரை அது பற்றியும் எனக்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. என்னுடைய வயோதிக காலத்தில் எனக்கு உடல் நலப் பிரச்சினைகளும் இருப்பதினால், நான் எனது மகன் சங்கரை கடலூர் சிறைக்கு சென்று பார்க்க முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மகன் சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும்போது, அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார். அது சம்மந்தமான குற்ற வழக்கில் அவர் நீதிமன்றத்தால் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இப்பொழுது மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி எனது மகனை லஞ்ச ஒழிப்பு துறையில் பணியில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதையும் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொண்டேன்.
இது குறித்து இன்று வரை எனக்கோ எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ, இந்நாள் வரை மேற்கண்ட எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், சங்கருக்கு கொடுக்கப்பட்ட, ஏன் தங்களை பணியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்ற நோட்டீசை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, கடலூர் சிறை அதிகாரி எனது மகன் சங்கரை யாரும் ஒரு மாதகாலம் சந்திக்கக் கூடாது என்று தண்டனை கொடுத்திருப்பதாக, அதனையும் செய்திகளின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.
சிறையில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் எனது மகனிடம் எந்த விதமான சட்ட உதவிகளை கூட நாட முடியாத ஒரு சூழலில், அவரிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் பணிநீக்கம் தொடர்பான நோட்டீசை வழங்க முயற்சி செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது மகன் சங்கர் பல அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டு சமூகம், அரசியல், ஊழல் தொடர்பான பல்வேறு கருத்துகளை பேசி வந்துள்ளார்.
எனது மகன் சங்கர் வெளியிடக்கூடிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதாலும், சங்கருக்கான ஆதரவாளர்கள் தளம் அதிகரித்து வருவதாலும், சங்கரை பழிவாங்க வேண்டும் என்று பலர் தொடர்ந்து முயற்சித்து வருவதை ஒரு தாயாக நான் அறிவேன். சங்கர் கடந்த காலங்களில் சங்கரை பல பொய் வழக்குகளில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியதும், தொடர்ந்து சங்கர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகள் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய தண்டனையும், அந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்காத வகையிலும், சட்ட உதவிகளை நாட முடியாத ஒரு சூழலை உருவாக்கி, ஒரு தாயாக நான் கூட சந்திக்க முடியாத சூழ்நிலையில், எனது மகன் சங்கர் தள்ளப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.
எனது மகன் சங்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது இயற்கை நீதிக்கு முரணானது என்று பல அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிறையில் எனது மகன் சங்கர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் என்று அவரை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.
எனது மகன் சவுக்கு சங்கரை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
0
0