மீண்டும் தூசி தட்டப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் புதுநெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 1:14 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Ajith Kumar latest news அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!