அரசுப் பள்ளியில் திடீர் தகராறு.. 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… சக மாணவன் கைது ; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Author: Babu Lakshmanan31 March 2023, 5:04 pm
திருவள்ளுர் ; திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளிருந்து சுமார் 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், ஆரணி சுப்பிரமணியநகர் பகுதியில் வசிக்கும் பாஸ்கரன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (14) இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
பெரியபாளையம் அடுத்த மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ஸ்ரீராம் (14) என்பவரும் இதே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்து வந்தனர். இந்த நிலையில், மாணவன் தமிழ்ச்செல்வன் ஸ்ரீராமை உருவ கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மாணவன் ஸ்ரீராம், தமிழ்ச்செல்வனை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் தமிழ்ச்செல்வனுக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ்ச்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு மாணவர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.