விடுமுறை நாட்களிலும் மாணவர்களை விடாத பள்ளிகள் : சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகளுக்கு நிபந்தனை..!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2022, 8:36 am
தமிழக பள்ளிக்கல்வி துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி வரையும், அரசு பள்ளிகளின் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 9ம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வி துறை வெளியிடவில்லை. இதனால், காலாண்டு தேர்வு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளை, பள்ளிகளே நிர்ணயித்துள்ளன.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் பலவற்றில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த சில பள்ளிகள், தாங்களும் சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர்.
அதற்கு, பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்; மற்ற வகுப்புகளுக்கு பெற்றோர் ஒப்புதல் இன்றி வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.