துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள்.. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 10:03 am

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதேர்வும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்து விட்டது. 1 முதல் 9 வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேவேளையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதனிடையே, 2022-23ம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்.

ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ – மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!