அலறும் சென்னைவாசிகள் : பாமக திடீர் போர்க்கொடி.. ஓட்டுப்போட வராததால் கொந்தளிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2022, 6:33 pm
தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டியது, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.
வாக்களிக்க வராத சென்னைவாசிகள்
ஏனென்றால் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 38 மாவட்டங்களிலும் பதிவான வாக்குகளே 60 சதவீதம்தான். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் 43.65 சதவீத வாக்காளர்கள்தான் ஓட்டு போட்டிருந்தனர்.
சென்னையில் உள்ள 61 லட்சத்து 31 ஆயிரத்து 112 வாக்காளர்களில், 27 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனர்.
அதாவது சரி பாதிக்கும் கீழே வாக்குப்பதிவு சரிந்து போயிருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 56 சதவீத வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கமே தலை வைத்து கூட படுக்கவில்லை. 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்கு சதவீதம் குறைவுக்கு என்ன காரணம்
குறைவான ஓட்டுகள் பதிவானதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும், கூட்டணி கட்சிகளின் பலத்தை பொறுத்தே முடிவுகள் அமையும் என்பது உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட சென்னை நகர மக்களின் அலட்சியமும் சோம்பேறித்தனமும் முக்கியமானவை என்றுதான் சொல்லவேண்டும்.
அதேநேரம் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம் தனது தீவிர பணிகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்படி குறைவான வாக்குகள் பதிவானதால் அதிகப் பாதிப்பை சந்தித்த கட்சிகள் பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவைதான். ஏனென்றால் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு இடத்தைக் கூட இந்த கட்சிகளால் கைப்பற்ற முடியவில்லை.
சென்னைவாசிகள் மீது பாமக ஆவேசம்!!
இந்த நிலையில்தான் பாமகவின் 15-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத சென்னை நகரவாசிகள் அலறும் விதமாக ஒரு குண்டை தூக்கி போட்டார்.
அவர் பேசும்போது, “புத்தகமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நிழல் அறிக்கையை தமிழக அரசு கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவேண்டும். எங்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசு கடந்த முறை தான் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்தில் 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வெறும் 13,000 ரூபாய் கோடி நிதி ஒதுக்கீடு போதாது!
பாமகவுக்கு கிடைத்த வெற்றி
ஆளும் கட்சியும் சரி, ஆண்ட கட்சியும் சரி நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், இது பணத்திற்கு கிடைத்த வெற்றி.
இனி வரும் தேர்தலில் கட்சி சின்னத்தை தவிர்த்து, அனைவருக்கும் சுயேச்சை சின்னம் கொடுத்தால் தான் மக்கள் மக்களுக்காக ஓட்டு போடுவார்கள். இல்லையென்றால் காசு கொடுத்து கட்சிக்கு ஓட்டு போட வைத்து விடுவார்கள். சென்னை நகர மக்கள் இந்த முறை தேர்தலில் 43 சதவீத வாக்கு மட்டுமே அளித்துள்ளார்கள். மாற்றம் வேண்டும் என்றால் சென்னைவாசிகள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வரவேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டால் எந்த மாற்றமும் ஏற்படாது.
வசதிகளிருந்து வாக்களிக்காத சென்னை மக்கள்
இன்று சென்னை மக்கள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். சாலைகள் நன்றாக இருக்கிறது. குடிநீர் வசதியும் உள்ளது. அரை மணி நேரம் கூட மின்வெட்டு இல்லை. இப்படி எல்லா வசதிகளும் செய்து கொடுத்தும் கூட, சென்னை மக்கள் வாக்களிக்கும் தங்களின் ஜனநாயக கடமையை ஏன் ஆற்றவில்லை? அதைத் தவிர அப்படி வேறு என்ன வேலை இருந்தது? எனவே சென்னை மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கூடாது” என்று அவர் ஆவேசப்பட்டார்.
மக்களின் அடிப்படை வசதிகள் என்கிறபோது குடிநீர், பாதாள சாக்கடை, சாலை அமைத்தல், குப்பைகளை அகற்றுதல், மின் இணைப்பு, சுகாதார மேம்பாடு, பஸ் போக்குவரத்து ஆகியவை வருகின்றன. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருப்பதுபோல சென்னை நகரவாசிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறுத்த முடியுமா?…
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் இரண்டு விதமான கருத்துகளை முன்வைக்கின்றனர்.
சென்னைக்கு இனி அடிப்படை வசதிகள் செய்துதரக்கூடாது
“வாக்களிப்பது ஜனநாயக கடமை என கூறி மக்களை வாக்களிக்க செய்ய வேண்டியது அரசு, அரசியல் கட்சிகளின் கடமை என்பது உண்மைதான். அதே நேரம் அதில் மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் சென்னையில் வெறும் 43 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு அடிப்படை வசதிகளை இனி செய்து தரக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துவது ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
ஏனென்றால் முந்தைய அதிமுக அரசு பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து 3 ஆண்டுகள் வழங்கிய 4500 ரூபாய் பணப் பரிசை சென்னையில் வசிக்கும் 100 சதவீதம் பேரும் ரேஷன் கடைகளில் வாங்கி உள்ளனர்.
ரேஷன் கடைக்கு வந்தவர் வாக்குசாவடிக்கு வரவில்லை
அதேபோல கடந்த ஆண்டு திமுக ஆட்சியை கைப்பற்றிய பிறகு கொரோனா பரவல் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்ததற்காக இரு தவணைகளாக வழங்கிய 2 ஆயிரம் ரூபாயை அத்தனை பேரும் முழுமையாக பெற்று இருக்கிறார்கள். இருப்போர், இல்லாதோர் என அவ்வளவு பேரும் எந்த பாகுபாடுமின்றி நீண்ட கியூ வரிசையில் நின்று
பல மணி நேரம் காத்திருந்து பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் தேர்தலில் ஓட்டு போட இவர்களில் பாதிப்பேர் கூட வாக்குச்சாவடி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பது வேதனை தரும் விஷயம். அதனால் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எந்த பயனையும் ரேஷன் கார்டுகள் மூலம் பெற முடியாது என்ற எச்சரிக்கையை விழிப்புணர்வுக்காக முதற்கட்டமாக தமிழக அரசு வெளியிடலாம்.
அதேநேரம் அன்புமணி ராமதாஸ் சொல்வதை திமுக அரசு நிறைவேற்றுவது சாத்தியமில்லாதது. அப்படி அடிப்படை வசதிகளை சென்னை நகர மக்களுக்கு செய்து கொடுக்காவிட்டால் திமுகவுக்கு சென்னையில் மட்டுமல்ல மாநிலத்தில் எங்குமே ஆதரவு கிடைக்காது. மேலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுகிறார்களோ, இல்லையோ மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது ஆளும் கட்சியின் கடமை. அதை மறுக்கும் உரிமை அரசுக்கு கிடையாது என்று நீதி கேட்டு நிச்சயம் ஏராளமானோர் கோர்ட்டு படி ஏற ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துவிடும்.
மிகக் குறைந்த சதவீத வாக்குப்பதிவு நடந்த சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி 170 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருப்பதால் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தலை தமிழக அரசு கண்டு கொள்ளவே செய்யாது.
ஏனென்றால் சென்னையில் பாமக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அந்த ஆதங்கத்தில்தான் அவர் இது போல் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் உண்மையை உடைத்தனர்.