அண்ணாமலை பாத யாத்திரையில் பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்.. மிஸ்டு கால் முகாமில் நடந்த மாற்றம்… காத்திருந்த அதிர்ச்சி!!!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2023, 7:56 pm
அண்ணாமலை பாத யாத்திரையில் பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்.. மிஸ்டு கால் முகாமில் நடந்த மாற்றம்… காத்திருந்த அதிர்ச்சி!!!
நாகப்பட்டினத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நடைபெற்றது. நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அப்பகுதியில் பந்தல் போடப்பட்டு, பாஜகவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கைபேசியில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் அவர்கள் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அங்கிருந்தவர்கள் பலரும் மிஸ்டு கால் கொடுத்து பாஜகவில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வெளிப்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் யூனிஃபார்மோடு அங்கு சென்று விவரங்களைக் கேட்டு பாஜகவில் இணைவதற்காக, தங்களது கைப்பேசியில் இருந்து மிஸ்டு கால் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினார்.
அதன் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகை ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.