பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சம்… பொதுமன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ; சீமான் எச்சரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
23 April 2024, 9:15 pm

சென்னை ; இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சமாகும்.

இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இசுலாமியப் பெருமக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இசுலாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாரும் இந்த நாட்டிற்கு அந்நியர்கள் அல்ல. ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துக்களின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் இலாபத்திற்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும்.

ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது. தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

மேலும் படிக்க: அரசு ஊழியர்கள், பெண்கள் ஓட்டு யாருக்கு…? திக்கு முக்காடும் CM ஸ்டாலின்…! தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…!

மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமரானால் இந்த நாட்டில் சமத்துவம், சனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும்,
பன்முகத்தன்மையையும் சிதைத்தழிக்கும் மோடி தலைமையிலான பாஜகவிற்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பாசிச மனப்பான்மைக்கு நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், எனக் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!