போஸ்டரில் திருமாவளவன் புகைப்படத்தை மட்டும் காணோம்… விசிகவை ஒதுக்குகிறதா திமுக? : சீமானின் கேள்வியால் சலசலப்பு!!
Author: Babu Lakshmanan8 February 2022, 6:35 pm
சென்னை : கோவையில் தேர்தலுக்காக ஒட்டப்பட்ட போஸ்டரில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படம் இடம்பெற்ற நிலையில், திருமாவளவன் புகைப்படம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டது ..? என திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- 50 ஆண்டு காலமாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும், வெள்ளம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. துணிப்பையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில் மஞ்சப்பைதான் கொண்டு வரனுமா..? பச்சைப் பை கொண்டுவரக் கூடாதா..? இதற்கு முதலில் பாலீத்தீன், பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்தாலே, துணிப்பை கலாச்சாரம் தானாக மேலோங்கும்.
நல்லாட்சி என்பது சட்டவிதிகளை மதிப்பது என்பதுதான். அதனை நீங்கள் செய்கிறீர்களா..? எனது தம்பிகளை கடத்தி 3 நாட்களுக்கு மேலாக வைத்து மிரட்டுகிறீர்கள். இதுதான் உங்களின் நல்லாட்சியா..? ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.
விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சியுடன் போட்டி எல்லாம் இல்லை. விஜய் எனது தம்பி. எங்களின் இருவருடைய கோட்பாடும் வேறு. எனக்கு ரூ.1,800 கோடி சொத்து இருப்பதாகக் கூறுபவர்கள், அது எங்கிருந்து வந்தது என்றும் கூற வேண்டும். எனது வீட்டிலும் சோதனை செய்துவிட்டு, பாஜக பணத்தை எடுத்துச் செல்லட்டும். தலித் இஸ்லாமிய கூட்டமைப்பு வைத்த திருமாவளவன், இஸ்லாமியர் சிறையில் உள்ளதை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் தேர்தலின்போது சிதம்பரத்தில் மட்டும் திருமாவளவனுக்கு பேச அனுமதி மற்ற இடங்களில் பேச வாய்ப்பளிக்கவில்லை.
கோவையில் தேர்தலுக்கான சுவரொட்டியில் அனைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்ற நிலையில், திருமாவளவன் உருவப்படம் மட்டும் இடம்பெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65 சதவீத இடங்களில் மட்டுமே நாங்கள் போட்டியிடுகிறோம், என்று கூறினார்.