இது வெட்கக்கேடு… வாக்களித்த மக்களுக்கு பச்சை துரோகம் செய்த திமுக ; சீமான் கொந்தளிப்பு!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 9:01 pm

மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? என்று நாமை தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,250 ஏக்கர் விளைநிலங்களையும், 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

ஆனால், திமுக அரசு போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று (26.02.2024) புதிய விமான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை தி.மு.க. அரசு கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது அரச பயங்கரவாதமாகும்.

விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பதுபோல் நாடகமாடிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்கி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதி மறுத்து தி.மு.க. அரசு கைது செய்வதென்பது வெட்கக்கேடானதாகும்.

மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? தி.மு.க.வின் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசிற்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?