அன்னைக்கு Gobackmodi… இன்னைக்கு Welcomebackmodi-யா…? வெட்கக்கேடு… திமுகவை விளாசிய சீமான்..!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 4:15 pm

எதிர்க்கட்சியாக இருந்தபோது, மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கெதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துப்பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டையாளும் ஆட்சியாளர்கள், தலைவர் பெருமக்களின் வருகைக்கெதிராக எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் சனநாயக உரிமை பேணப்படுகின்ற இந்நாட்டில், சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கே அச்சுறுத்தல் விடுக்கும் திமுக அரசின் கொடுங்கோல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் மிதமிஞ்சிய வரவேற்பு அளிப்பதும், அவ்வருகைக்கு எதிர்ப்புத்தெரிவிப்போர் மீது அரசதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதுமான செயல்பாடுகள் வெட்கக்கேடானவையாகும்.

அண்டை மாநிலமான தெலுங்கானாவில் ஐயா சந்திரசேகரராவ் அவர்கள் முதுகெலும்போடும், நெஞ்சுரத்தோடு பிரதமர் மோடியின் எதேச்சதிகாரப் போக்கையும், அரசியல் அத்துமீறலையும் வீரியமாக எதிர்த்து நிற்கும் வேளையில், திமுக அரசு பாஜகவின் பாதம்பணிந்து சரணடைவது இழிவில்லையா? ஆரியத்தை எதிர்க்கத் துப்பற்று, காலடியில் விழுந்து மண்டியிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பாஜக பி டீம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் இன்று ராஷ்ட்ரீய சேவா சங்க சேய் கழகமாக செயல்படுவது கொடுமை.

மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தந்திருந்தால், நாங்கள் ஏன் பாஜக அரசை விமர்சிக்கப்போகிறோம்? எல்லாவற்றையுமே மக்களுக்கு விரோதமாகச்செய்தால், விமர்சிக்காது மக்கள் என்ன செய்வார்கள்? கருத்துரிமையின் அடிநாதமான விமர்சனத்தையே ஏற்க முடியாதென்றால், இந்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சிதானே!

GoBackModi என்பது வெற்றுக் கீச்சகக்கொத்துக்குறியல்ல! தமிழர்களோடு காலங்காலமாகப் பகைமைப் பாராட்டி, வஞ்சகத்தின் மூலம் தமிழ்நாட்டை அழிக்கத்துடிக்கும் ஆரிய மேலாதிக்கத்துக்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் அறச்சீற்றம்; இனமானத்தமிழர்களின் ஒப்பற்றப் போர்முழக்கம்! அதனைப் பதிவுசெய்யவிடாது தடுத்து, மக்களின் குரல்வளையை நெரித்து, கருத்துச்சுதந்திரத்தை முடக்க நினையும் திமுக அரசின் செயல் பச்சைச் சந்தர்ப்பவாதமாகும். முந்தைய அதிமுக அரசை, அடிமையாட்சி என்று வர்ணித்துவிட்டு, இன்றைக்கு கொத்தடிமை அரசாக திமுக மாறி நிற்பது நாட்டு மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

காவல்துறையின் இந்த பாஜகவிற்கு ஆதரவான செயல்பாடு ஆகப்பெரும் சனநாயகத்தை கட்டிகாக்கும் திராவிட மாடலென்றால் வாழ்க திராவிட மாடல்.!? பாரத் மாதாக்கி ஜே.!?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!