பதைபதைப்பை உண்டாக்கும் மாணவர்களின் தொடர் மரணங்கள் … தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் : சீமான் வலியுறுத்தல்…!!
Author: Babu Lakshmanan25 July 2022, 9:41 pm
பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும், பாடச்சுமைகளால் மாணவப்பிள்ளைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களைக் குறைக்கவும், பள்ளிச்சூழலில் மாணவப்பிள்ளைகளுக்கான முழுப்பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமெனக் கோருகிறேன்.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து, சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்தி மாணவச்செல்வங்களின் மனநலனை செம்மைப்படுத்தவும், இனியொரு உயிர் போகாவண்ணம் தடுக்க அவர்களது பாதுகாப்பையும், உளவியல் நலனையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.