ரசிகர்களின் ஓட்டுகளை இழுக்க சீமான் பிளான்?…நடிகர் விஜய்க்கு திடீர் புகழாரம்!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2023, 7:05 pm
தமிழ்த் திரையுலகில், சில படங்கள் வெளியாவதற்கு முன்பே அரசியல் ரீதியாக சர்ச்சைகளை உருவாக்கும் களமாக மாறிவிடுவது உண்டு. அதுபோல்தான் அண்மையில் நடந்த இரும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மாறிப்போனது. என்றே சொல்லவேண்டும்.
இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் கலந்து கொண்டனர்.
நொந்து பேசிய திருமாவளவன்!!
விழாவில் மனம் நொந்து பேசிய திருமாவளவன் “இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை.
இதனால் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது. இது தொழில் போட்டி மட்டுமல்ல, தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுகிற மோசமான அணுகுமுறை. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்து வருகிறது. யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில்தான் இதனை பேசுகிறேன்.
மறைமுக தாக்குதல்
எல்லாத் துறையிலும் தமிழகம் பிறருக்கு முன்னோடியாக இருக்கிறது. சினிமாவுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் பங்கு உண்டு. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். சினிமாவை வருமானத்துக்கு மட்டுமின்றி கொள்கைகளுக்காகவும் பயன்படுத்தினார்கள்” என்று குறிப்பிட்டார்.
“யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில்தான் இதனை பேசுகிறேன்” என்று மிகுந்த எச்சரிக்கையுடன் திருமாவளவன் பேசினாலும், அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைத் தான் மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்று திரையிலகில் மட்டுமின்றி அரசியல் வட்டாரதிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
கிண்டல் செய்த நாராயண் திருப்பதி
அவருடைய பேச்சை தமிழக பாஜக துணைத் தலைவர், நாராயண் திருப்பதி தனக்கே உரிய குறும்புத்தனத்துடன் ட்விட்டர் பதிவு மூலம் கேலியும், கிண்டலும் செய்தார்.
“ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது?’- திருமாவளவன். ‘ரெட் ஜெயண்ட் ‘என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கில்லையா? மிடுக்கில்லையா?” என்று குட்டு வைத்து இருந்தார்.
வழக்கமாக தனது பேச்சுக்கு பாஜகவில் இருந்து யாராவது எதிர்ப்பு தெரிவித்தாலோ அல்லது அதை ஏளனம் செய்தாலோ வரிந்து கட்டிக்கொண்டு பதிலடி கொடுக்கும் திருமாவளவன், இந்த விஷயத்தில் அப்படியே கப்சிப் ஆகி அடங்கிவிட்டார்.
இதிலிருந்தே அவர் இந்த விவகாரத்தில் பயந்து நடு நடுங்குவதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்படும் அதே நேரத்தில், இரும்பன் பட இசை வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகளும், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய்யை புகழ்ந்து தள்ளிய சீமான்
இப்படம் குறித்து சீமான் நிறைய பேசியிருந்தாலும் விழாவில் அவர் நடிகர் விஜயை பெரிதும் பாராட்டி பேசி இருப்பதுதான் ஹைலைட்!
“எனது தம்பி விஜய் சினிமாவுக்கு வருவதற்கு அவரது அப்பா எஸ்ஏசி-தான் காரணம். ஆனால் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உயர்ந்த நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது உழைப்புதான் காரணம். காலையில் நானும் இயக்குனர் பாரதிராஜாவும் நடைபயணம் போகும்போது தம்பி விஜய் வீட்டை தாண்டி தான் செல்வோம். அப்போது பாரதிராஜா சொல்வார் என்னாமாடா ஆடுறான் அந்த பையன் என்று சொல்வார். விஜய் அளவுக்கு நடன அசைவுகளை வெளிக்கொண்டுவந்து ஈர்க்கும் அளவுக்கு ஆடுவதற்கு இந்தியாவில் யாரும் இல்லை. காரணம் அவரின் உழைப்பு.
எளிதில் புகழ் வராது. ஒருவன் வெற்றியடைந்து புகழ் பெறுகிறான் என்றால் அவனை பார்த்து பொறாமைபடாதே. அதற்காக அவன் கொடுத்த விலை, வலி, அவமானம் ஆகியவற்றை நினைத்து பாருங்கள். அப்போது யார் மேலும் உங்களுக்கு பொறாமை வராது. அவ்வளவு உழைப்பு இருக்கு. அதுபோலத்தான் தம்பி விஜய். அவர் நடிகராவதற்கு அவரது அப்பா இருக்கலாம். ஆனால் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு கடினமாக உழைப்புதான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் கடின உழைப்பு. அதை தவிர வேறு வழியில்லை” என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.
திருமாவளவனின் வீடியோ பதிவு போல இதுவும் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
சீமான் திரையுலகை சார்ந்தவர் என்றாலும் கூட வேறொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை ஏன் வானளாவாக புகழ்ந்து தள்ளினார்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது?… என்ற கேள்விகளும் எழுகின்றன.
சீமான் இப்படி பேச காரணம்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி வெளியாக உள்ளது. அதேநேரம் வாரிசு படத்துடன், மற்றொரு முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படமும் வெளியாகிறது.
அதனால் சீமான் இப்படி பேசி இருக்கலாம் என்று திரையுலகினர் காரணம் கூறினாலும் கூட, இது அரசியல் வட்டாரத்தில் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?….
“விஜய் மக்கள் இயக்கத்தினர் 2026 தேர்தல் களத்தில் விஜய் குதிப்பார் என்றும், 2031ல் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி முதலமைச்சர் ஆவார் என்றும் மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் அவ்வப்போது போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இது சாத்தியமா, இல்லையா?… என்பது வேறு விஷயம்.
ஆனால் இதில் எந்த அளவிற்கு விஜய் உறுதியாக இருக்கிறார் என்பதை கூற முடியாது. இதற்கு முக்கிய காரணம் அவர் தனது படம் வெளியீடு தொடர்பாக இனி ஒவ்வொரு முறையும் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்துள்ளார்.
ஒரு நிறுவனத்திற்கு கீழ் தமிழ் சினிமா?
விசிக தலைவர் திருமாவளவன் கூறுவதைப் போல இன்று தமிழ் சினிமா ஒரே ஒரு நிறுவனத்தின் பிடிக்குள் சென்று விட்டது. அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றும் ஆகிவிட்டது. அவர்களது ஆதரவு இல்லாமல் நடித்த படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைப்பதும் மிக மிக கடினம் என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இதை நடிகர் ரஜினி முன்கூட்டியே உணர்ந்ததாலும், ஒரு குறிப்பிட்ட கட்சி அவருக்கு கடும் அழுத்தம் கொடுத்ததாலும்தான் 2020 டிசம்பர் மாதம் கட்சி தொடங்கி தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்த அவர் கட்சியும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டு விட்டார். சினிமாவே போதும் ஆளை விடுங்கள் என்று ஒரு பெரிய கும்பிடாகவும் போட்டார்.
அன்று ரஜினிக்கு ஏற்பட்ட நிலை போல நடிகர் விஜய் கட்சி தொடங்கினாலும் அவருக்கும் அதேபோன்ற நெருக்கடி தொடரலாம். ஏனென்றால் தமிழகத்தில் வெகு காலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் ஒரு கட்சியின் வாக்குகளை மட்டும்தான் விஜய் பிரிப்பார் என்கிறார்கள். அது, அக் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பெரும் தடையாக இருக்கும் என்பதும் நிச்சயம். அதனால் அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து நடிகர் விஜய் ஒருபோதும் அரசியல் கட்சி தொடங்கப் போவதும் இல்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதும் கிடையாது.
யோசிக்க வேண்டிய விஷயம்
அதுபோன்ற தொரு சூழ்நிலையில் விஜய் மீது தீவிர பற்று கொண்டுள்ள அவருடைய ரசிகர்களில் குறைந்த பட்சம் 10 லட்சம் பேரின் வாக்குகளையாவது
2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும்
தன் பக்கம் இழுத்து, குறிப்பிட்ட அளவில் வெற்றிகளை பெற்று தன்னை ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக காட்டும் நோக்குடன்தான் இதுவரை இல்லாத அளவிற்கு சீமான், நடிகர் விஜயின் கடின உழைப்பை பாராட்டுகிறார். அவரை மிஞ்ச இந்தியாவில் ஆளே கிடையாது என்றும் புகழாரம் சூட்டுகிறார்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுவும் யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது!
0
0