உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் சவுக்கு சங்கர் ; சீமான் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan29 November 2022, 7:27 pm
சென்னை ; சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதியை எதிர்த்து களமிறங்குவதாக அறிவித்த சவுக்கு சங்கருக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர், நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனையின் பேரில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
சிறையில் இருந்து வந்த அவர், திமுக மற்றும் காவல்துறையினர் செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இனி அரசியல் களத்தில் குதிக்கப்போவதாக அறிவித்த அவர், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும், அது திருவாரூராக இருந்தாலும் சரி, சேப்பாக்கமாக இருந்தாலும் சரி, என அதிரடியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சவுக்கு சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, சீமான் அவருக்கு புத்தகத்தை பரிசாக அளித்தார்.
இதைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சீமான் கூறுகையில், “உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போட்டியிட்டால், அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் சங்கருக்கு ஆதரவளிப்போம். விவசாய சின்னத்திலும் அவரை களமிறக்க தயார். இல்லாவிட்டால், அவர் சுயேட்சையாக போட்டியிட விரும்பினாலும், நான் இறங்கி வேலை செய்வேன்,” எனக் கூறினார்.
சீமானின் இந்த அறிவிப்பின் மூலம் சவுக்கு சங்கர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து விட்டாரா..? என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.