உங்கள் தொகுதியில் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை அனுப்புங்க : அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 11:20 am

தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை தெரிவிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கலெக்டர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அத்தியாவசிய திட்டங்களை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டம் உருவாக்கியுள்ளது என்றும், இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரைகளை பெற்று மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவற்றை பரிசீலித்து ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளதாக இந்த கடிதத்தின் மூலம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?